மன்னிப்பு கேட்க முடியாது.. உங்களால் முடிந்ததை பாத்துக்கங்க.. கனிமொழிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ்..!

கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை. அவதூறு பரப்பியது தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு தொடர்பாக 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கனிமொழி நோட்டீசுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. சொத்து மதிப்புகளையும் வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதற்கு அண்ணாமலை தரப்பில் தனித்தனியாக பதில் அனுப்பி இருந்தார். இதனிடையே, கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை. அவதூறு பரப்பியது தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு தொடர்பாக 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்டதற்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 

இந்நிலையில், கனிமொழி அனுப்பிய நோட்டீசுக்கு வழக்கறிஞர் பால்கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பியுள்ளார். அதில், திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வெளியிட்டேன். யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. 

கனிமொழியின் சொத்து விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன். உங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன். இழப்பீடு எதுவும் தர முடியாது. எந்த நடவடிக்கை என்றாலும் அதனை சட்டப்படி சந்திக்க தயார். மேலும், சட்ட நடவடிக்கையின் மூலம் தனது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *