மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்: கங்கைக் கரையில் நடந்தது என்ன?

வாழ்நாள் கனவாக ஒலிம்பிக்கில் வென்றெடுத்த பதக்கங்களை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை ஆற்றில் வீசியெறியச் சென்ற இடத்தில் உணர்ச்சிமிகு காட்சிகள் அரங்கேறியுள்ளன. கடைசி நேரத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். கங்கைக் கரையில் பதக்கங்களுடன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23-ம் தேதியன்று போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள். 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் உட்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதி வழியில் நீடித்த இந்த போராட்டத்தின், கடந்த 28-ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவன்று மாறிப் போனது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக புறப்பட முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

ஜந்தர் மந்தரில் போராட அனுமதி மறுப்பு

மல்யுத்த வீரர், வீராங்கனைகள், அவர்களது ஆதரவாளர்கள் மீது கலவரம் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இதில், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோருடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பிறகு ஜந்தர் மந்தரில் அவர்கள் அமைத்திருந்த கூடாரம் அகற்றப்பட்டது. அவர்கள் உடைமைகள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்களை அனுமதிக்க முடியாது என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பதக்கங்களை கங்கையில் வீச முடிவு

இதையடுத்து, ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை, ஹரித்வாருக்கு பேரணியாக சென்று கங்கை நதியில் வீசப்போவதாக, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்னைகள் அறிவித்தனர்.

“இனிமேலும் எங்களுக்கு பதக்கங்கள் தேவையில்லை. கடுமையான உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கை நதியில் வீசுவோம். துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள்” என்று பஜ்ரங் பூனியா தனது ட்வீட்டில் வேதனை தெரிவித்திருந்தார்.

‘வீரர்களை தடுக்க மாட்டோம்’ – காவல்துறை

கங்கையில் பதக்கங்களை வீசுவதாக அறிவித்துள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுக்கப் போவதில்லை என்று ஹரித்வார் சிறப்பு எஸ்.பி. அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகைக்குப் பேசிய அவர், “மல்யுத்த வீரர், வீராங்கனைகள் விரும்பியதைச் செய்யலாம். கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவுடன் அவர்கள் வந்தால் நாங்கள் தடுக்க மாட்டோம். அதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் இருந்து எந்தவொரு உத்தரவும் வரவில்லை. கங்கையில் தங்கம், வெள்ளி, அஸ்தி போன்றவற்றை மக்கள் கரைக்கிறார்கள். அதேபோல், மல்யுத்த வீரர்கள் விரும்பினால் அவர்களது பதக்கங்களை கங்கையில் வீசலாம். தசராவன்று 15 லட்சம் மக்கள் ஹரித்வாரில் புனித நீராடுவார்கள். அதேபோல், மல்யுத்த வீரர், வீராங்கனைகளையும் வரவேற்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

ஹரித்வாரை நோக்கி பதக்கங்களுடன் ஊர்வலம்

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தபடி, ஹரித்வாருக்கு ஊர்வலமாகச் சென்றனர். சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் தாங்கள் வென்ற பதக்கங்களை எடுத்து வந்திருந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதற்கு நீதி வேண்டி போராட்டத்தை தொடரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்தனர். ஹர் கி பௌரியை அடைந்ததும், வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் ஆகியோர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தனர்.

வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

நாட்டுக்காக வென்றெடுத்த பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்த பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாய்த் அங்கே சென்றார். பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை கைவிடுமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் அவர் சமரசம் பேசினார்.

அவர்களிடம் இருந்து பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட நரேஷ் திகாயத், தங்களுக்கு 5 நாட்கள் மட்டும் அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டார்.

தோனிக்கான வாழ்த்திலும் வேதனையை பதிவு செய்த சாக்ஷி மாலிக்

கடந்த ஒன்றரை மாதங்களாக ஐ.பி.எல். திருவிழாவில் மூழ்கி ஒட்டுமொத்த தேசமும் திளைத்திருந்த அதே வேளையில், ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டி ரிசர்வ் டேவிலும் மழையால் பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை சி.எஸ்.கே. கேப்டன் தோனி கோப்பையை வாங்கியதை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி தீர்க்கின்றனர். அதேநாளில் நாட்டுக்காக ஒலிம்பிக் உள்பட சர்வதேச அளவில் சாதித்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசி எறியத் துணிந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தெரிவித்த வாழ்த்திலும் கூட சாக்ஷி மாலிக் தங்களது துயரத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், “தோனி, சி.எஸ்.கே.வுக்கு வாழ்த்துகள். குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது அவர்களுக்குரிய மரியாதை கிடைப்பதில் மகிழ்கிறோம். எங்களுக்கோ, நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

நாடு முழுவதும் பிரபலமாக உள்ள விளையாட்டு வீரர்கள், நீதிக்கான தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று இந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நம்புகின்றனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா போன்ற சில வீரர்கள் ட்விட்டர் வாயிலாக ஆதரவாக குரல் கொடுத்தனர்.

நாடு முழுவதும் பிரபலமாக உள்ள விளையாட்டு வீரர்கள், நீதிக்கான தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று இந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நம்புகின்றனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா போன்ற சில வீரர்கள் ட்விட்டர் வாயிலாக ஆதரவாக குரல் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *