“துப்பாக்கி குண்டுகளை மார்பில் வாங்குவோம்” – ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடருமா?
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், அவர்களது ஆதரவாளர்கள் மீது கலவரம் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோருடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டார்கள். அவர்கள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராகக் கடந்த பல வாரங்களாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
தெருவில் இழுத்துச் செல்லப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23 அன்று தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள்.
18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் உட்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து பல்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளனர். பிறகு இரவு நீண்டநேரம் கழித்து வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், சங்கீதா போகாட் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இன்னும் சிலர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தங்களை சாலையிலிருந்து இழுத்துச் சென்றதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.
ஜந்தர் மந்தரில் இருந்த 109 போராட்டக்காரர்கள் உட்பட டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு இடங்களுக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் மறியல் நடந்த இடத்தில் இருந்த அவர்களது உடைமைகளை போலீசார் அகற்றினர்.
கைது செய்யப்பட்ட அனைத்து மல்யுத்த வீராங்கனைகளும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆண் மல்யுத்த வீரர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான டெல்லி காவல்துறையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிற விளையாட்டு வீரர்கள்
ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருந்த மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசாரால் நடத்தப்பட்ட விதம் குறித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காணொளியை ட்வீட் செய்து, “இது என்னை வருந்தச் செய்கிறது. இந்தப் பிரச்னையை வேறு சிறந்த வழியில் கையாண்டிருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து தற்போது இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரியும் இந்தச் சம்பவம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர், “மல்யுத்த வீராங்கனைகளை இழுத்துச் செல்லவேண்டிய அவசியம் என்ன?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “எங்கள் மல்யுத்த வீராங்கனைகளைப் பற்றிச் சிந்திக்காமல் ஏன் இப்படி இழுத்துச் செல்ல வேண்டும்? யாராக இருந்தாலும் சரி, இப்படி நடத்தப்படுவது சரியான வழி இல்லை. இந்த முழு சூழ்நிலையும் எப்படி நடந்ததோ அதற்கேற்ப அது மதிப்பிடப்படும் என்றும் நம்புகிறேன்,” என்று தனது ட்வீட்டில் தெரிவித்தார்.
“துப்பாக்கிச்சூடு நடத்தினால் குண்டுகளை மார்பில் வாங்குவேன்”
மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களில் ஒருவரான பஜ்ரங் புனியா, தான் சுடத் தயாராக இருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பதிவிட்ட ட்வீட் ஒன்றுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான என்சி அஸ்தான தனது ட்விட்டர் பதிவில், மல்யுத்த வீரர்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசியபோது இப்படி குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் இப்படி பதிவிட்டுள்ளார்.
அதில், “தேவைப்பட்டால், நாங்கள் துப்பாக்கிச்சூடும் நடத்துவோம். இப்போது அவர்களை குப்பைப் பையைப் போல் இழுத்து எறிந்துள்ளார்கள். ஆனால், பிரிவு 129இன்படி சுடும் உரிமை காவல்துறைக்கு உண்டு. சரியான சூழ்நிலையில், அந்த ஆசையும் நிறைவேறும். உடற்கூராய்வு மேசையின்மீது சந்திப்போம்,” என்று பதிவிட்டார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பஜ்ரங் புனியா இட்ட ட்வீட்டில், “இந்த ஐபிஎஸ் அதிகாரி எங்களைச் சுடுவது பற்றிப் பேசுகிறார். சகோதரர்கள் முன்னணியில் நிற்கிறார்கள். தோட்டாக்கலை மார்பில் ஏந்துவதற்கு எங்கே வர வேண்டும் எனச் சொல்லுங்கள். நான் என் முதுகைக் காட்ட மாட்டேன், என் மார்பில் ஏந்துவேன் எனச் சத்தியம் செய்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சிரித்துக் கொண்டிருப்பதைப் போல் ஒரு போலியான புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது.
அதுகுறித்துக் கருத்து தெரிவித்த சாக்ஷி மாலிக், “இதைச் செய்பவர்களுக்கு வெட்கமே இல்லை. இது மாதிரியான ஆட்களை கடவுள் எப்படி படைத்தார்? மனமுடைந்து நிற்கும் பெண்களின் முகத்தில் சிரிப்பை ஒட்டுகிறார்கள். இவர்களுக்கு இதயமே இல்லை என்று நினைக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
காசிபூர் எல்லையில் விவசாயிகள்
மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்குப் பல விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாயத் தலைவரான ராகேஷ் திகைத், “போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையை விமர்சித்ததுடன், டெல்லியின் காசிபூர் எல்லையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ராகேஷ் திகைத் தனது ட்விட்டர் பதிவில், “மல்யுத்த வீராங்கனை மகள்களை வலுக்கட்டாயமாக சாலையில் இழுத்துச் சென்ற மத்திய அரசு, நாடாளுமன்ற அலங்காரத்தில் பெருமை கொள்கிறது. ஆனால், மகள்களின் அலறல் இன்று ஆட்சியாளர்களுக்குக் கேட்கவில்லை. நீதி வழங்கப்பட வேண்டும். மகாபஞ்சாயத்து நடக்கும் வரை காசிபூர் எல்லையில் விவசாயிகள் உறுதியாக நிற்பார்கள்,” என்று தெரிவித்தார்.
இருப்பினும் பிறகு அவர் டெல்லி எல்லையிலிருந்து விவசாயிகள் திரும்பிச் செல்வதாக அறிவித்தார். மேலும், வரவிருக்கும் பஞ்சாயத்தில் மல்யுத்த வீரர்களின் பிரச்னையும் சேர்க்கப்படும் என்று கூறினார்.
மல்யுத்த வீராங்கனைகள் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென முறையிட்டனர். ஆனால், இதுவரைக்கும் பிரதமர் உட்பட மத்திய அரசின் எந்தவோர் அமைச்சரும் இதுகுறித்து எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடர் டெல்லி போலீஸ் அனுமதிக்குமா?
நேற்றைய சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த டெல்லி காவல்துறையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இதுகுறித்து டெல்லி காவல்துறை இயக்குநர் சுமன் நல்வா கூறுகையில், “கடந்த 38 நாட்களாக டெல்லி போலீசார் இந்தப் போராட்டக்காரர்களுக்கு நாங்கள் பல வசதிகளை அளித்து வந்தோம். அவர்களிடம் ஜெனரேட்டர், தண்ணீர் வசதி உள்ளன.
அவர்கள் அங்கு தொடர்ச்சியாகக்கூட இருக்கவில்லை. அவ்வப்போது வருவதும் போவதும்தான் அவர்களது வழக்கம். அவர்கள் என்ன சொன்னாலும் சரி, நாங்கள் அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தோம்,” என்று தெரிவித்தார்.
“மே 23ஆம் தேதியன்று, மெழுகுவர்த்தில் ஊர்வலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நாங்கள் அவர்களிடம் நிறைய பேசி, இது உயர் பாதுகாப்பு மண்டலம் என்றும் இங்கு ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் கூறினோம். அப்போதும் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அந்த அணிவகுப்பு அமைதியான முறையில் நிறைவடைந்தது.
“நேற்று மிகவும் முக்கியமான நாள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அவர்களுடைய போராட்டம் நடப்பதை யாராலும் அனுமதிக்க முடியாது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். அதன்பிறகும், அவர்கள் போராட்டம் நடத்தியபோதுதான் தடுத்து வைக்கப்பட்டனர். எங்களுடைய பெண் காவலர்கள் அவர்களைத் தடுத்து வைத்து, பிறகு மாலையில் விடுவித்தனர்,” என்று தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தர்ணா வாபஸ் பெறப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை இயக்குநரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், ஜந்தர் மந்தர் தவிர வேறு இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.