கள்ளச்சாராய மரணங்கள்: தமிழகம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு 

சென்னை: கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 3 பெண்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன் ஆகிய 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவிஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இதர குற்றவாளிகளைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தவும், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து வேறு இடங்களில் மெத்தனால் விற்கப்படுகிறாதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *