‘அரசியலில் இருந்து விலகுகிறேன்’- திருப்பூர் துரைசாமி திடீர் அறிவிப்பு
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவுக்கு கடிதம் எழுதியதன் மூலம் மதிமுகவில் கலகத்தை ஏற்படுத்தியுள்ள அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மதிமுக அவைத் தலைவராக இருப்பவர் திருப்பூர் துரைசாமி. தலைமையுடன் மனக்கசப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இவர் கடந்த மாதம் 27-ம் தேதியன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மதிமுகவை தொடங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.
ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது.
இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது’ என கடுமையாக சாடியிருந்தார்.
இது மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் மனக்கசப்பில் பேசுகிறார் என்று துரைவைகோ உள்ளிட்டவர்கள் பதில் அளித்து இருந்தனர். இந்த நிலையில் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் துரைசாமி, தான் பொது வாழ்க்கையில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். தனது வீட்டில் போட்டி பொதுக்குழு எதுவும் நடத்தவில்லை என்றும் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளிலும் தான் சேரப் போவதில்லை என்றும் பொது வாழ்வில் இருந்து விலகியிருக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.