ஆவின் நிறுவனத்தை அச்சுறுத்துகிறதா அமுல் பால் கொள்முதல்? கிளம்பும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
தமிழக பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதலில் ஈடுபட முயல்வதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மே 25ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், குஜராத்தின் கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுவரை தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது பால் கொள்முதலிலும் ஈடுபடுவதால் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் இதற்குத் தீர்வு காண வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமுல் பால் கொள்முதல்
அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்களையும் பதப்படுத்தும் நிலையங்களையும் நிறுவியுள்ளது குறித்தும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ‘வெண்மை புரட்சி’ என்ற கொள்கைக்கு எதிரானது என்பதோடு, நுகர்வோருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். ஆகவே, அமுல் நிறுவனம் தமிழகப் பகுதிகளில் பால் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் தன் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஏன் இப்படி எழுத வேண்டும்?
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மட்டுமல்லாது, பல தனியார் பால் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவையும் தமிழ்நாட்டில்தான் பாலை கொள்முதல் செய்கின்றன. இந்த நிலையில், அமுல் நிறுவனம் பாலை கொள்முதல் செய்வதற்கு மட்டும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
முதல்வர் இப்படியொரு கடிதத்தை எழுதக் காரணம் இருக்கிறது. கடந்த 21, 22ஆம் தேதிகளில் தமிழநாட்டின் வட மாவட்டங்களில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்றில், அமுல் நிறுவனத்தின் விளம்பரம் வெளியானது.
அதில், “தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கிராமவாரியாக, கூட்டுறவு அமைப்பு, சுய உதவிக் குழு முறையில் புதிய பால் சேகரிப்பு நிலையம் அமைத்து, பாலில் அதிக லாபமடைய விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அழைக்கவும்” எனக் கூறி, தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இந்தத் தகவலை பால் முகவர்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதற்குப் பிறகே மத்திய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“தனியார் கொள்முதல் செய்வதைப் போல தனித்தனியாக கொள்முதல் செய்தால் பிரச்னையில்லை. ஆனால், கூட்டுறவு அமைப்புகளைப் போல அமைப்புகளை ஆரம்பித்து, பாலைக் கொள்முதல் செய்ய அமுல் முயல்கிறது.
முதலில் இது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபத்தை அளித்தாலும், ஆவின் நலிந்துவிட்டால், பிறகு தனியார் நிர்ணியிப்பதுதான் விலை என்றாகிவிடும். அம்மாதிரி சூழலில் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் இதை முதல்வரிடம் எடுத்துச் சென்றோம்” என்கிறார் பால் முகவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ. பொன்னுச்சாமி.
ஆவினை சரிசெய்ய வேண்டும்
தமிழ்நாட்டில் தினமும் இரண்டே கால் கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 84 சதவீதம் பாலை தனியார் பால் நிறுவனங்கள்தான் வாங்கி, விற்கிறார்கள். 16 சதவீத பாலைத்தான் ஆவின் கையாள்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் 40 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்துவந்த ஆவின் தற்போது 26-37 லட்சம் லிட்டர் பாலைத்தான் கொள்முதல் செய்வதாக பால் உற்பத்தியாளர்களும் விநியோகிஸ்தர்களும் சொல்கிறார்கள்.
ஆனால், அரசு தினமும் 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்வதாகச் சொல்கிறது. இந்த நிலையில் அமுல் நிறுவனமும் தமிழ்நாட்டில் பாலை கொள்முதல் செய்யத் தொடங்கினால், ஆவினின் கொள்முதல் இன்னமும் குறையும்.
இதில் அமுல் மீது குறை சொல்வதை விட்டுவிட்டு, ஆவினை சரிசெய்ய வேண்டும் என்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.
“ஆவினுக்கு வரும் பால் குறைவதற்கு முக்கியக் காரணம், விலைதான். தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ஆவினைவிட 3 முதல் ஆறு ரூபாய் வரை அதிக விலை கொடுக்கிறார்கள்.
ஒரு பக்கம் பால் கொள்முதல் குறைந்துவரும் நிலையில், ஆவின் பாலுக்கான தேவை அதே அளவில் நீடிப்பதால், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடரை வாங்கி, பாலாக்கி விற்பனை செய்து வருகிறது ஆவின்.
இதனால், தினமும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் அமுலும் இங்கே கொள்முதல் செய்ய முயல்கிறது. ஆரம்பத்தில் இது உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், எதிர்காலத்தில் என்ன விளைவை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில்தான் தமிழ்நாடு அரசு விரைவில் விழித்துக்கொள்ள வேண்டும் என்கிறோம்,” என்கிறார் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.சி. ராஜேந்திரன்.
கர்நாடக மாநிலத்தில் செயல்படும் கூட்டுறவு அமைப்பான நந்தினி, மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகச் சொல்லும் ராஜேந்திரன், அதன் காரணமாக அங்கே தனியார் பால் நிறுவனங்கள் செயல்பட முடியாததைச்சுட்டிக்காட்டுகிறார்.
பால்வளத் துறை அமைச்சர் என்ன சொல்கிறார்
இந்த விவகாரம் குறித்து பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜைத் தொடர்புகொள்ள பல முறை முயன்றும் பதில் பெற இயலவில்லை. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடமிருந்து ஒரு செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி தர வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். தி.மு.க. அரசு வந்த பிறகு லிட்டருக்கு 3 ருபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரே சீரான விலையை அனைத்து காலங்களிலும் ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. வேறு எந்த நிறுவனங்களும் கடைபிடிப்பதில்லை.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளைச் சரிசெய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெகுவிரைவில் சீரான பால் கொள்முதல், பால் பதப்படுத்துதல், விற்பனையை முறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
வேறு நிறுவனங்கள் எதையும் கண்டு யாரும் அச்சப்படவில்லை. ஆனால், பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையிடுவதில்லை. எனவேதான் முதல்வர் மத்திய அரசுக்கு தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என கடிதம் எழுதினார். பால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு நியாயமான விலையை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை ஆவின் மேற்கொள்ளும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் வேறு சில தகவல்களையும் சொல்கிறார்கள். அதாவது, இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் தற்போது பால் உற்பத்தி குறைந்திருக்கிறது. ஆகவேதான், எங்கெல்லாம் பால் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் கொள்முதல் செய்ய முயல்கிறார்கள். தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்குவார்கள். தட்டுப்பாடு குறைந்தவுடன் வாங்கும் விலையைக் குறைத்துவிடுவார்கள். ஆனால், ஆவின் அப்படிச் செய்ய முடியாது. அதுவும் பிரச்சனைக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
ஆனால், ஆவின் நிர்வாகத்தின் மீது பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள் என பல தரப்பினருக்கும் புகார்கள் இருக்கின்றன. கடந்த இரண்டாண்டுகளில் பல விஷயங்கள் மோசமாகியிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இவற்றைச் சரிசெய்யாமல், எதுவும் மேம்படாது என்கிறார்கள் அவர்கள்.
தமிழ்நாட்டில் தற்போது ஆவினின் கீழ் 9,673 பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. மாநிலம் முழுவதும் நான்கரை லட்சம் பேர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.