T.R.B.Rajaa: 3 முறை எம்.எல்.ஏ.. திமுக ஐடி விங்கின் ‘மாஸ்டர் மைண்ட்’ – யார் இந்த டி.ஆர்.பி ராஜா?
தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏவான டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த நாசர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சி
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 8 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழக அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கருக்கு வழங்கப்பட்டது.
தமிழக அமைச்சரவை மாற்றம்
அதேபோல, கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கடந்த ஓரிரு தினங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
யார் இந்த டி.ஆர்.பி ராஜா?
தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த நாசர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டி.ஆர். பி. ராஜா என்று அழைக்கப்படும் தாலிக்கோட்டை ராஜு பாலு ராஜா மன்னார்குடி தொகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.
டி.ஆர் பாலு மகன்
அவர் வேறு யாருமில்லை, திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர் பாலு தான் இவரது தந்தை. மன்னர்குடி தொகுதியில் இருந்து 2011, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் டி. ஆர். பி. ராஜா வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டில் திமுகவின் என்.ஆர்.ஐ விங்கின் முதல் செயலாளராக ராஜா நியமிக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டிலும் அதே மன்னார்குடி தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இவர் திமுக ஐடி விங் அதாவது தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாநில செயலாளராகவும் இருக்கிறார்.
டி.ஆர்.பி ராஜாவுக்கு வாய்ப்பு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக பதவியேற்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு, எந்த துறை ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே டி.ஆர்.பி ராஜாவின் தந்தை டி.ஆர். பாலு மகனுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
புதிய அமைச்சர்
தற்போது அதன்படி, தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பி ராஜாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜாவை தமிழக அமைச்சரவையில் சேர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பரிந்துரைக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, டி.ஆர்.பி.ராஜாவின் பதவியேற்பு விழா வரும் 11-ம் தேதி காலை 10 மணியளவில் ராஜ் பவனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.