RRvs PBKS: ‘ஓபனராக களமிறங்கிய அஸ்வின்’…காரணம் என்ன? அடுத்த போட்டியிலும் ஓபனரா? சாம்சன் அதிரடி பதில்!

அஸ்வினை ஓபனராக களமிறக்கியது ஏன் என்பது குறித்து சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.

ஐபிஎல் 16ஆவது சீசனின் 8ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பஞ்சாப் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கில்ஸ் அணியில் ஓபனர்கள் பிரப்சிம்ரன் சிங் 60 (34), ஷிகர் தவன் 86 (56) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். குறிப்பாக, 11 ஓவரின்போது தவன் 29 (29) ரன்களை மட்டும் சேர்த்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்துதான் அதிரடியாக விளையாடி 86 (56) ரன்களை குவித்தார். இறுதியில் ஜிதேஷ் ஷர்மா 27 (16) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தார்.

இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 197/4 ரன்களை குவித்து அசத்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 (25), ஷிம்ரோன் ஹெட்மையர் 36 (18), துரூவ் ஜுரேல் 32 (15) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.

19ஆவது ஓவர்:

இருப்பினும், பட்லர் 19 (11), படிக்கல் 21 (26), ரியான் பராக் 20 (12) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இறுதியில் 12 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் ஓவர் வீச வந்தார். இவருக்கு எதிராக துரூவ் மிரட்டலாக செயல்பட்டு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்களை விளாசி அசத்தியதால், அந்த ஓவரில் 18 ரன்கள் கசிந்தது.

கடைசி ஓவர்:

இறுதியில், 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அப்போது சாம் கரன் அபாரமாக பந்துவீசி 10 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார். ஹெட்மையர் 36 (18), துரூவால் 32 (15) எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில், ராஜஸ்தான் அணி 192/7 ரன்களை மட்டும் சேர்த்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அஸ்வின் டக்அவுட்:

இப்போட்டியில் ஓபனராக பட்லர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கி ஷாக் கொடுத்தார். இவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் 0 (4) ரன்களை மட்டும் அடித்து, நடையைக் கட்டினார்.

சஞ்சு சாம்சன் பேட்டி:

இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய சஞ்சு சாம்சன், ”நிச்சயம் இது பேட்டிங் செய்ய ஏற்ற பிட்ச்தான். எங்கள் அணி பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு, பல வேரியேஷன்களை பயன்படுத்தி பந்துவீசி அசத்தினார்கள். 197 ரன்களை அவர்களை சுருட்டியதே பெரிய விஷயம். எங்கள் அணி பேட்டர்கள்தான் சிறப்பாக செயல்படவில்லை” எனக் கூறினார்.

அஸ்வினை ஓபனராக களமிறக்கியது குறித்து பேசிய சாம்சன், ”தேவ்தத் படிக்கல் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். இதனால்தான், அவரை மிடில் வரிசையில் பயன்படுத்த முடிவு செய்தேன். பட்லர் கேட்ச் பிடித்தபோது விரலில் காயம் ஏற்பட்டது. ஆகையால்தான், அஸ்வினுக்கு ஓபனர் வாய்ப்பு கிடைத்தது” எனத் தெரிவித்தார்.