‘தோனியிடம் பேசினோம்’…செம்ம கோபத்தில் இருந்தார்: காரணம் அந்த சிஎஸ்கே வீரர்தான்: கவாஸ்கர் ஓபன் டாக்!
தீபக் சஹார் சிறந்த பார்மில் இல்லை. பென் ஸ்டோக்ஸால் 4 ஓவர்களை முழுமையாக வீச முடியவில்லை. அனுபவமற்ற துஷர் தேஷ்பண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். இதனை கடந்த இரண்டு போட்டிகளில் பார்த்துவிட்டோம்.
முதல் போட்டியில் 178 ரன்களை அடித்தும், சிஎஸ்கேவால் குஜராத் டைடன்ஸை வீழ்த்த முடியவில்லை. காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். இரண்டாவது போட்டியில் ஸ்பின்னர்கள் ன் அலி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரால்தான் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இந்த 2ஆவது போட்டியில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர்கள் 11 ஓவர்களை வீசி வெறும் 2 விக்கெட்களை மட்டும் கைப்பற்றிவிட்டு, 142 ரன்களை வாரி வழங்கியிருந்தார்கள். இது பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
நோ பால் – ஒயிட்:
வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது மட்டும் சிஎஸ்கேவுக்கு பிரச்சினை கிடையாது. நோ-பால், ஒயிட்களை அடிக்கடி வீசுகிறார்கள். முதல் இரண்டு போட்டிகளில் 16 ஒயிட் (குஜராத்துக்கு எதிராக 4, லக்னோவுக்கு எதிராக 12), 5 நோ-பால் (குஜராத்துக்கு எதிராக 2, லக்னோவுக்கு எதிராக 3) வீசி சொதப்பியிருக்கிறார்கள். அதாவது, முதல் போட்டியில் தவறு செய்துவிட்டு, இரண்டாவது போட்டியில் அதைவிட அதிகமாகவே சொதப்பியிருக்கிறார்கள்.
தோனி அதிருப்தி:
இதனால், இரண்டாவது போட்டி முடிந்தப் பிறகு பேசிய கேப்டன் மகேந்திரசிங் தோனி, ”ஏற்கனவே இரண்டு முறை, ஓவர்களை வீச அதிக பந்துகளை எடுத்துக்கொண்டுவிட்டதால், இரண்டுமுறை ஓவர்ரேட் வார்னிங் எனக்கு விடப்பட்டுள்ளது. மூன்றாவது முறையும் இதேபோல் நடந்தால், வேறு கேப்டனுக்கு கீழ்தான் நீங்கள் விளையாட வேண்டியிருக்கும்” என வீரர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
மூன்றுமுறை ஓவர்ரேட் வார்னிங் விடப்பட்டால், கேப்டனுக்கு 30 லட்சம் அபராதம், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும். ஆகையால்தான், தோனி அப்படி பேசியிருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் பேட்டி:
இந்நிலையில், தோனி அப்படி பேசியப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷோப், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆகியோர் தோனியிடம் சென்று பேசியிருக்கிறார்கள். அப்போது தோனி என்ன பேசினார் என்பது குறித்து கவாஸ்கர் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ளார். அதில், ”தோனியிடம் போட்டி முடிந்தப் பிறகு போய் பேசினோம். அப்போது, ராஜ்வர்தன் மீது தோனி கோபத்தில் இருந்தார். ராஜ்வர்தன் சிறப்பாக பந்துவீசக் கூடியவர், ஆனால் அடிக்கடி நோ-பால் வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என தோனி கூறியதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சொதப்பிய பௌலர்களுக்கு அணிக்குள்ளே தண்டனை கொடுங்கள் என கவாஸ்கர் தோனியிடம் பரிந்துரைத்துள்ளார்.