விறு விறு.. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்.. கணக்கெடுப்பு தீவிரம்.
சென்னை: வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாத கால கட்டத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்க ஆரம்பித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள்வது குறித்த ஆலோசனைகளும் கூட்டங்களும் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பும் என அரசியல்கட்சிகள் பரபரக்க தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையமும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாகவும், வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி கூறியதாவது:- நாடாளுமன்ற பொதுத்தேர்தல அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 135 % இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதாவது ஒரு தொகுதியில் 200 வாக்குச்சாவடி உள்ளது என்றால் 270 வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்போம். இதற்கான கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த பணி ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும். அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.
கூடுதலாக தேவைப்படும் இயந்திரங்கள், பழுதான இயந்திரங்களுக்கு மாற்று இயந்திரங்கள் வழங்குவது பற்றி தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அடுத்தடுத்த கட்டங்களாக நடக்கும்” என்றார்.