பெண் கேட்டு தரமறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்; விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் தர மறுத்த பெற்றோரை வளர்ப்பு மகனே நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 40). அதே கிராமத்தில் காப்புகாடு அருகில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலையம்மாள்(32). இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாரதி(23), என்பவர் சிறுவயதிலே தாயை இழந்த நிலையில், தந்தையும் கண்டுகொள்ளாததால் கோவிந்தன் வளர்த்து வந்தார். 

கோவிந்தனின் நிலம் ஊருக்கு எல்லைபகுதியில் காப்புகாடு அருகில் உள்ளது. இவரது நிலத்திலே வீடும் கட்டி வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து அவ்வபோது பாரதி படிக்காத நிலையில் அவரது தந்தை வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து கொண்டு காட்டில் பன்றி வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவிந்தனின் மூத்த மகள் மீது பாரதிக்கு காதல் ஏற்பட்டு நேற்று முன்தினம் கோவிந்தனிடம் பாரதி பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. 

இதில் அந்த பெண்ணிற்கு விருப்பம் இல்லாத நிலையில் கோவிந்தன் பாரதியின் விருப்பத்திற்கு  மறுத்துள்ளார். இதில் கோபமடைந்த பாரதி நேற்று மாலை கோவிந்தன் பால் கறந்துகொண்டிருந்தபோது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோவிந்தனின் தலையில் சுட்டுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் மிதந்த கோவிந்தனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்த அவரது மனைவி கலையம்மாளையும் நாட்டு துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார். 

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து பாரதி நாட்டு துப்பாக்கியுடன் காப்புகாட்டில் தப்பியோடிவிட்டார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தம்பதியினரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கண்டாச்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விழுப்புரம் டிஎஸ்பி ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் துப்பாக்கியால் பெற்றோரை சுட்டு விட்டு தப்பி சென்ற வளர்ப்பு மகன் பாரதி அருகிலுள்ள காப்பு காட்டினுள் பதுங்கியுள்ளார். அவரை தேடி விழுப்புரம் வனசரக அலுவலர் பாபு தலைமையில் வனத்துறையினர் காட்டினுள் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *