தேசிய விளையாட்டு போட்டிகள் விவகாரம் : தமிழக முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்.
டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை முறையாக தெரிவிக்காத தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வர்.
ஓட்டப்பந்தயம், நீச்சல், பேட்மிட்டன், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 போட்டிகள் நடைபெறும். அந்தந்த மாநில அரசு மாணவர்களை தேர்வு செய்து போட்டிக்கு தயார்படுத்தி அனுப்புவர். போட்டியில் பதக்கங்கள் பெறும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உயர் கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் படிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
அந்தவகையில் இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த ஜுன் 6-ம் தேதி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான அறிவிப்பு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பபடும்.
பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் முதன்மை உடற்கல்வி இயக்குநர் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அதற்கான பட்டியலை அனுப்பி வைப்பார்.
ஆனால் தமிழ்நாட்டில் இந்தாண்டு போட்டியில் பங்குபெற வேண்டிய மாணவர்கள் தேர்வு செய்யப் படவில்லை. இதனால், 247 மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது குறித்தான தகவல் செய்திகளில் வெளியானது. தேசிய போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வலியுறுத்தி அனுப்பபட்ட கடிதத்தை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கல்வித்துறை உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை இச்செயலுக்கு அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் கலந்து கொள்வதற்கான தகவலை முறையாக தெரிவிக்கவில்லை எனக் கூறி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவின் பேரில் மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தவிட்டார்.