கொடைக்கானல் | 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 21 பேர் காயம்
பழநி: பழநி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் 100 அடி பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 22 பேர் டெம்போ வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து விட்டு, நேற்று (மே 14) இரவு கொடைக்கானலில் இருந்து பழநிக்கு திரும்பியுள்ளனர். மலைச் சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த முகேஸ்வரன் (15), திவ்யா (29), தன்சிகா (4), கவுரி (18), காயத்ரி (21), பாரதி செல்வன் (15), ஓட்டுநர் இளம்பரிதி (25) உட்பட 22 பேர் பலத்த காயமடைந்தனர். வாகனம் விபத்துக்குள்ளானதை அறிந்த பழநி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் தஞ்சாவூர் அருகேயுள்ள மடிகை காந்தி காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.