சென்னையில் பிரம்மாண்ட கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7-ல் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7-ந் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.

தமிழ்நாட்டில் கருணாநிதி கால் படாத இடமில்லை. சந்திக்காத மனிதர்களில்லை. தொடங்காத திட்டமில்லை. உருகாத உடன்பிறப்புகளில்லை. இப்படி ஊர் தோறும் – நகர் தோறும் – கிராமம் தோறும் விழா எடுக்கத் தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே பத்து ஆண்டுகளுக்கு கொண்டாட வேண்டி வரும்.

தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கருணாநிதி பெயரிலான சின்னங்கள் மாதம் தோறும் திறக்கப்பட இருக்கின்றன.

95 வயது வரை வாழ்ந்த கருணாநிதி- இன்னும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் – இதோ இந்த மேடையில் நடுநாயகமாக அவரே அமர்ந்திருப்பார். முதுமையின் காரணமாக அவர் உடல் நலிவுற்றார்கள்.

முதுமையின் காரணமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்கள்.பிரிந்தார்கள் என்று சொல்வதை விட – நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல – மறைந்திருந்து நம்மை கருணாநிதி கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.எந்த நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் -எந்த திட்டங்களைத் தீட்டினாலும் -எந்த விழாக்களில் பங்கெடுத்தாலும் – எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும் – கருணாநிதி என்னை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தோடு தான் நான் தினமும் அவர் நினைவுகளாகத் தான் இருக்கிறேன்.

அந்த நினைவுகளின் காரணமாகத் தான் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று அவரது நினைவகத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறேன்.

சென்னையில் ஆகஸ்ட் 7-ந் தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளது. 365 நாளும் கருணாநிதியைக் கொண்டாட இருக்கிறோம். இந்தக் கொண்டாட்டங்களின் மூலமாக கருணாநிதிக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழைச் சேர்க்கப் போகிறோம் என்பதல்ல.நாம் நம் நன்றியின் அடையாளமாக இதனைக் கொண்டாடப் போகிறோம்.

கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் கருணாநிதி. நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு திராவிட மாடல் என்ற தத்துவத்தோடு ஒரு ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்றால் அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *