ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு.. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது..!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா முதலிய அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை நடத்த தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்குகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை ஆதரித்து வாதங்களை முன்வைத்த தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் கலாச்சார நிகழ்ச்சி என்றும், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் இழக்கப்படுவதில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. “கேளிக்கையின் இயல்பு கொண்ட விளையாட்டு செயல்பாடு கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்து தவறானது” எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.பெரு, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் எருது சண்டையை தங்கள் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றன எனவும் தமிழக அரசு வாதிட்டது. ஜல்லிக்கட்டில் ஈடுபடும் காளைகள் ஆண்டு முழுவதும் விவசாயிகளால் பராமரிக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

முன்னதாக, ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை அடக்கும் விளையாட்டுகளில் மனிதர்களின் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை பயன்படுத்தலாமா எனவும் நாட்டு மாடுகளைப் பாதுகாக்க விளையாட்டு எப்படி அவசியமாகிறது என்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்து தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை அல்ல என்றும் வரலாற்று, கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் கூறியது.

2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக தமிழ்நாடு விலங்குகள் வதை தடுப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, குடியரசுத் தலைவரும் அதில் கையெழுத்திட்டார். இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதேபோல மகாராஷ்டிர அரசும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்க சட்டத்திருத்தம் செய்துள்ளது. இந்த இரு மாநில சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பீட்டா (PETA) போன்ற அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை முடிவுற்ற நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *