IPL 2023: ‘பிளே ஆப் செல்லப் போவது யார்?’…இந்த 4 அணிகளுக்குதான் வாய்ப்பு: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி கணிப்பு!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி (இன்றுமுதல்) துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. துவக்க போட்டியும், பைனலும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோம் கிரோண்டில்:
கொரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது ஹோம் கிரோண்டில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் கிரோண்டில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கணிப்பு:
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் லீக் தொடராக ஐபிஎல் இருப்பதால், இத்தொடர் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. ஆகையால், இத்தொடர் துவங்குவதற்கு முன்பே, எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதனால், கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இந்தெந்த அணிகள் பிளே ஆஃப் செல்லும் என்பதை முன்கூட்டியே கணித்து கூறி வருகிறார்கள்.
ஸ்மித் கணிப்பு:
அந்த வகையில், ஆஸ்திரேலிய அணி வீரரும், ஐபிஎல் 16ஆவது சீசனில் வர்ணனையாளருமான ஸ்டீவ் ஸ்மித்தும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
சிஎஸ்கே:
ஸ்மித் கணித்துள்ள முதல் அணி சிஎஸ்கேதான். இந்த அணிக்குத்தான் பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு மிகமிக அதிகம் எனக் கூறியுள்ளார். சிஎஸ்கேவில் தோனி, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, தீபக் சஹார் போன்ற தரமான வீர ர்கள் இருப்பதால், இம்முறை சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
குஜராத் டைடன்ஸ்:
அடுத்து, நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என ஸ்மித் கூறியுள்ளார். அந்த அணியில் ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், மேத்யூ வேட், டேவிட் மில்லர், தேவத்தியா போன்ற அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். இதனால், இம்முறையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
லக்னோ, சன் ரைசர்ஸ்:
இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், எய்டன் மார்க்கரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐபிஎலில் ஸ்மித் வரலாறு:
2012ஆம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு, அறிமுக வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், அதன்பிறகு 2014, 2105ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடைசெய்யப்பட்டதால், புதிதாக உருவாக்கப்பட்ட புனே அணிக்காக இவர் விளையாடினார். குறிப்பாக, 2017ஆம் ஆண்டில் புனே அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, அந்த அணியை பைனல் வரை கூட்டிச்சென்றார்.
இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பிய அவர், 2020ஆம் ஆண்டில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும், அவரது கேப்டன்ஸியில் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்படாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்ற அவர், 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்கவில்லை. தொடர்ந்து, 16ஆவது சீசனுக்கான மினி ஏலத்திலும் ஸ்மித் ஏலம் போகவில்லை.