புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்

புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இடவசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வருகிற மே 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” என பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *