அணையில் விழுந்த செல்போன்: 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி மீட்ட அரசு அதிகாரி
சத்தீஸ்கரில் ஓர் அரசு அதிகாரி தனது கைபேசியை தவறுதலாக அணைக்குள் தவறவிட்டுவிட்டார். அதை மீட்டெடுப்பதற்காக அணை நீரை முற்றிலும் வெளியேற்ற உத்தரவிட்டதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த திங்கட்கிழமை விடுமுறைக்காக அங்குள்ள கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார்.
ராஜேஷ் விஷ்வாஸ் என்ற அரசு அதிகாரி அணை மீது நின்று செல்ஃபி எடுக்கும்போது தனது திறன்பேசியை கை நழுவி அணைகுள் போட்டுவிட்டார். ஆகவே, அணைக்குள் விழுந்த தனது திறன்பேசியை வெளியே எடுப்பதற்காக அணையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதைச் செய்து முடிக்க மூன்று நாட்கள் ஆனது.
இறுதியில் அவரது திறன்பேசி கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அது செயலிழக்கும் அளவுக்கு அதற்குள் தண்ணீர் புகுந்திருந்தது.
அந்தத் திறன்பேசியில் முக்கியமான அரசாங்க தகவல்கள் இருப்பதாகவும் அதை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இந்தச் செயலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால், அவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
உணவு ஆய்வாளரான விஷ்வாஸ் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தனது சாம்சங் திறன்பேசியை சத்தீஸ்கரில் உள்ள கெர்கட்டா அணைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கை நழுவி போட்டுவிட்டார்.
உள்ளூர் முக்குளிப்பவர்களை வைத்து அதைக் கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு டீசல் பம்பை அவர் பணம் செலுத்தி வர வைத்ததாக உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
“அருகிலுள்ள கால்வாயில் சிறிது தண்ணீரை வெளியேற்ற” ஓர் அதிகாரியிடம் வாய்மொழியாக அனுமதி பெற்றதாகக் கூறிய அவர், “உண்மையில் வெளியேற்றப்பட்ட இந்த அதிக நீர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும்” என்றும் கூறியுள்ளார்.
பல நாட்களுக்கு இயங்கிய டீசல் பம்ப், சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியது. இந்தத் தண்ணீர் 600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குப் பாசனம் செய்யப் போதுமானது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நீர்வளத் துறையைச் சேர்ந்த மற்றோர் அதிகாரி அங்கு வந்தபோது தண்ணீரை அணையிலிருந்து வெளியேற்றும் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
“விசாரணை நடைபெறும் வரை அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீர் ஓர் அத்தியாவசிய வளம். அதை இப்படி வீணாக்க முடியாது,” என்று கன்கேர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா தி நேஷனல் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
ராஜேஷ் விஷ்வாஸ் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுவதை மறுத்துள்ளார். மேலும், தான் வெளியேற்றிய நீர் அணையின் உபரிநீர் பகுதியிலிருந்து வந்தது என்றும் “அது பயன்பாட்டு நிலையில் இல்லை” என்றும் கூறினார்.
ஆனால், அவரது செயல் அரசியல்வாதிகளிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது. மாநிலத்தின் எதிர்க்கட்சியான பாஜகவின் தேசிய துணைத் தலைவர், “கொளுத்தும் கோடையில் தண்ணீர் வசதிக்காக மக்கள் தண்ணீர் லாரிகளை நம்பியுள்ளனர். அப்படியிருக்கும்போது, அந்த அதிகாரி பாசனத்திற்குப் பயன்படுத்தக்கூடிய லட்சக்கணக்கான லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார். இதை 1,500 ஏக்கர் நிலத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம்,” என்று ட்வீட் செய்துள்ளார்.