யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணனின் மகன் சாதனை
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸின் மகன் அரவிந்த் மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் (யுபிஎஸ்சி) இந்திய அளவில் 361 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய குடிமை பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவு பணி, இந்திய வனத்துறை, இந்திய வருவாய் துறை உள்ளிட்ட துறைகளுக்கு மத்திய அரசு தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.
இந்த தேர்வு 3 பிரிவுகளை கொண்டது. முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகும். முதல் நிலை தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் முதன்மை தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான முதன்மை தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடந்தது. நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் மே மாதம் வரை நடந்தன. இதில் 933 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இவர்கள் அவரவர் பெற்ற தரவரிசை (ரேங்க்) படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, பி பணிகளில் அமர்த்தப்படுவார்கள். நேற்றைய தினம் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வான 933 பேரில் இறுதியாக தகுதி பெற்றவர்களில் முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்துள்ளனர். இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரீமா லோஹியா 2ஆம் இடம் பிடித்துள்ளார். அது போல் உமா ஹரதி 3ஆம் இடமும் செல்வி ஸ்மிர்தி மிஷ்ரா 4ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற முதல் 25 பேரில் 14 பேர் பெண்கள் 11 பேர் ஆண்கள் ஆவர்.
இந்திய தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள்களும் மகனும் தேர்ச்சி பெற்று சிறந்த ரேங்க் வாங்கியுள்ளனர். மாணவி சத்ரியா கவின் 169வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு செயலாளர் ஜகந்நாதனின் மகள்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மை செயலர் மற்றும் ஆணையர் அதுல் ஆனந்தின் மகள் ஈசானி 290வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன், 361வது இடத்தைப் பிடித்துள்ளார். பொன்னேரி சப்கலெக்டராக உள்ள ஐஸ்வரியாவின் அக்கா சுஷ்மிதா(26) 528-வது இடத்தை பிடித்து குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக உள்ளார். இவர் கால்நடை மருத்துவம் படித்துள்ளார். இவர் 1992 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். சுனாமி காலத்தில் இவரது மீட்பு பணிகளை அமெரிக்க முன்னாள் அதிபர்பில் கிளிண்டன் பாராட்டியிருந்தார். இவர் சுகாதாரத் துறை செயலாளர், உணவு பாதுகாப்பு துறை தலைமை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தார். தமிழகத்தில் கொரோனா கடுமையாக தாக்காத வரையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அது போல் உணவு துறையில் அதிகாரியாக இருந்த போதிலும் ரேஷன் அரிசி கடத்தல், பருப்பு பதுக்கலை கண்டுபிடித்தார். இவருக்கு பேரிடர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரும் உண்டு. எந்த பணியை கொடுத்தாலும் அதில் தனி முத்திரையை பதிப்பார்.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/ias-j-radhakrishnan-s-son-passed-in-upsc-exam-with-361th-rank-513194.html