சேலத்தில் 3 போலி மருத்துவர்கள் அதிரடி கைது! மருந்து, மாத்திரைகள் பறிமுதல்!

சேலத்தில் 3 போலி மருத்துவர்கள் அதிரடி கைது! மருந்து, மாத்திரைகள் பறிமுதல்!

சேலத்தில், ஒரே நாளில் மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாக சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஹெலன் குமார், அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் ஆகியோர் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே ஒருவர், வெறும் எஸ்எஸ்எல்சி மட்டுமே படித்துவிட்டு கிளினிக் நடத்தி வருவதும், நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்து வருவதும் தெரிய வந்தது.

கிளினிக் நடத்தி வந்த அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (74) என்பது தெரிய வந்தது.  அவருடைய கிளினிக்கில் இருந்து காய்ச்சல், தலைவலிக்கான மருந்து மாத்திரைகள், ஊசிகள், சிரிஞ்சுகள் கைப்பற்றப்பட்டன. அவரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல் சீலநாயக்கன்பட்டி பகுதியில், தாப்ரே ஆலம் (52) என்பவர் மருத்துவம் சாராத பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு அலோபதி  சிகிச்சை அளித்து வந்ததும், சொந்தமாக கிளினிக் நடத்தி வருவதும் தெரிய வந்தது. அவரையும் அன்னதானப்பட்டி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 மேலும், கருங்கல்பட்டி கல்கி தெருவைச் சேர்ந்த ஜெகநாதன் (60) என்பவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருவது கண்டறியப்பட்டது. அவருடைய வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கிருந்து ஏராளமான மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஊசி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ள ஜெகநாதன், அப்பகுதியில் கைராசியான மருத்துவர் என்ற பெயரும் எடுத்துள்ளார். அவரை செவ்வாய்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் ஒரே நாளில், உரிய கல்வித் தகுதியின்றி சட்ட விரோதமாக சிகிச்சை அளித்து வந்த மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.