மாணவர்களுக்கு வரவேற்பு..100 சதவிகித தேர்ச்சி இலக்கு..ஆசிரியர்கள் பணியாற்ற அன்பில் மகேஷ் அழைப்பு.
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சி கொடுக்க இலக்கு நிர்யணம் செய்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
2022 – 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்து கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் விடப்பட்டது.
அதன் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகும் ஜூன் 5 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7 ஆம் தேதியாக மாற்றப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
அதன் பின்னரும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வந்ததன் காரணமாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களிலும் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்ததது.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது.
தமிழ்நாட்டில் வெயில் லீவு விடாமல் சுள்ளென்று அடித்தாலும் மாணவர்களின் விடுமுறைக்காலம் முடிந்து விட்டது. வெயிலின் தாக்கத்தால் 12 நாட்கள் தாமதமாக இன்று தொடங்கியுள்ளது. நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12 திங்கள் கிழமையான இன்று பள்ளி திறக்கப்பட்டு உள்ளது.
முதல் நாளான இன்றைய தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளை வரவேற்று பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை கொடுத்தார்.
பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் உடல் நலனே முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளிகளில் நடப்பாண்டு அதிக அளவில் மாணவர்கள் இணைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 1.31 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர்கள் சீருடையில் வந்தாலும், பழைய பயண அட்டைகளை காண்பித்தாலும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நடத்துனர்கள், ஓட்டுனர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நடப்பாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வினை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு திட்டமிட்டதை விட தாமதாக இருப்பதால் அதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.