சமூக நீதியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாக்கிறார்.. சமூக நீதி மாநாட்டில் பரூக் அப்துல்லா புகழாரம்
சமூக நீதியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாக்கிறார்.. சமூக நீதி மாநாட்டில் பரூக் அப்துல்லா புகழாரம்
டெல்லி: பெரியாரும், கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாக்கிறார். நாட்டின் நன்மைக்காக நாம் அனைவரும் அவர் பின்னே ஒன்றிணைய வேண்டும் என்று டெல்லியில் நடந்த சமூக நீதிக்கான தேசிய மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்த முடியும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தும் கருத்தாக உள்ளது.
இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில மாநில முதல்வர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் அகில இந்திய தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமூகநீதி கூட்டமைப்பு
கடந்த மார்ச் 1-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாட்டை நடத்த முதல்வர் திட்டமிட்டு இருந்தார்.
19 கட்சிகள் ஆதரவு
இதில் பங்கேற்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் உள்ள மகராஷ்டிர மாநில அரசு இல்லத்தின் அரங்கத்தில் திங்கள் கிழமை மாலை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 19 கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
ஒன்றிணைய வேண்டும்
மாநாட்டில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பேசினார்கள். இந்த மாநாட்டில் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பெரியாரும், கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாக்கிறார். நாட்டின் நன்மைக்காக நாம் அனைவரும் அவர் பின்னே ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
அனைத்து சக்திகளையும்
சிபிஐ கட்சி பொதுச்செயலாளர் டி ராஜா பேசுகையில், “அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்பாட்டில் இணைத்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். தமிழ்நாடு திருவள்ளுவர் மண், அயோத்தி தாசர் மண். பெரியார் மண்.சிங்காரவேலர் மண். அண்ணா மண்.கலைஞர் மண். இவர்கள் அனைவரும் சுயமரியாதைக்காக போராடியவர்கள். தற்போது அந்த பணியை முதல்வர் செய்கிறார்” என்றார்.