இனி வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.. வெளியான புதிய உத்தரவு

வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் செல்போன் எண் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், மார்ட்கள் உள்ளிட்ட கடைகளில் பொருட்களை வாங்கி பில் போடும் போது, கவுண்டர்களில் இருக்கும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வாங்கி பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ஒரு சில ரீடெயில் கடைகளில் செல்போன் எண்ணை கொடுத்தால் மட்டுமே பில் ஜெனரேட் செய்ய முடியும் முறை பின்பற்றப்படுகிறது. தங்களின் ஆஃபர்கள், சிறப்பு அம்சங்கள், போனஸ் பாயிண்ட்ஸ் போன்ற விவரங்களை வாடிக்கையாளர்களிடம் வழங்கவே செல்போனை வாங்குவதாக கூறுகின்றனர்.

எனினும் வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் செல்போன் எண்ணை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாலும், செல்போன் எண் என்பது தங்களின் தனிப்பட்ட பிரைவசி என்று கருதுவதாலும் பலர் செல்போன் எண்ணை கேட்பது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் புகார்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ” வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுக்கவில்லை என்றால் பில் போட முடியாது என்று சில வியாபாரிகள் கூறுகின்றனர். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நியாயமற்ற செயல். மேலும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வாங்குவதில் பிரைவசி பற்றிய சந்தேகமும் உள்ளது.

இதுதொடர்பாக ரீடெயில் வியாபாரிகள், சிஐடி, பிக்கி போன்ற அமைப்புகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ரீடெயில் வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது” என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *