ஜடேஜாவிற்காக போடப்பட்ட எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் – கொண்டாடிய ரசிகர்கள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜாவிற்கு பிடித்த எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் குவாலிஃபையர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. பொதுவாக சென்னையில் நடக்கும் போட்டி என்றாலே அதில் தமிழ் பாடல்கள், சினிமா பிரபலங்கள் இடம்பெறுவது வாடிக்கை. அப்படி நடந்த போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதில், ரவீந்திர ஜடேஜா 16 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியின் போது ஜடேஜாவிற்கு பிடித்தமான வானத்தைப் போல படத்தில் இடம் பெற்ற எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.
தோனி மைதானத்திற்குள் பேட்டிங் ஆட வரும் போது படையப்பா தீம் மியூசிக்கும், கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா, நெருடங்குடா என்ற பாடலும் ஒலிக்கப்பட்டது. இதே போன்று ஜடேஜா களமிறங்கும் போது மெர்சல் அரசன் வாரான் என்று பாடல் ஒலிக்கப்பட்டது.
ஆனால், தோனி பேட்டிங் ஆட வேண்டும் என்பதற்காக ஜடேஜா விரைவில் அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் தோனி தோனி என்று கோஷமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் சார்பில் மன்னிப்பாயா என்ற பாடல் ஒலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் குவாலிஃபையர் போட்டியின் போது ஜடேஜாவிற்கு பிடித்தமான எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.சிஎஸ்கே மட்டும் அல்ல சிஎஸ்கே வீரர்களும் ஒரு குடும்பமாக இருப்பதால் இந்த பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் குறித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், நான் ஜிம்மில் தமிழ் பாட்டுத்தான் போடுவேன். அப்போது ஜடேஜா ஒரு பாட்டை கேட்டபின், அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆதலால் மீண்டும் ஒரு முறை போடச் சொன்னார். அந்தப் பாடல் தான் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று அஸ்வின் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.