முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணம்: வர்த்தக முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கிறார்
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று இரவு சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் 24-ம் தேதி நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கிறார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதை அடையும் நோக்கில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக தொழில் துறை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்குமாறு பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இதன் முதல்கட்டமாக முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் செல்கிறார்.
முன்னதாக, புதிதாக நியமிக்கப்பட்ட தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வரின் பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று நள்ளிரவு சிங்கப்பூர் செல்கிறார்.
இதுதொடர்பாக தமிழக தொழில் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 23, 24-ம் தேதிகளில் வர்த்தகக் குழுவுக்கு தலைமை வகித்து சிங்கப்பூர் செல்கிறார். வரும் 24-ம் தேதி சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தகப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் தொழில் வர்த்தக மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து ஜப்பான் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு சில நாட்கள் தங்கியிருந்து, முதலீட்டாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கிறார். பின்னர், தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இம்மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார்.