கணுக்கால் உள்வளைவு(clubfoot) – அரசு மருத்துவமனையில் தீர்வு – முகநூலில் நெகிழ்ச்சி பதிவு அனைவரும் படிக்கவும்
எஸ்.எம். சுபான் அவர்களுக்கு நன்றி என தெரிவித்து இந்த பகிர்வு ஆரம்பிக்கிறது.
இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு நானும் என் மனைவி மற்றும் இளைய மகன் மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.
மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சிங்காநல்லூரில் உள்ள பிரபல சாந்தி சோஷியல் சர்விஸ் கேண்டினில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நின்று கொண்டு இருந்தோம்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,
அக்குழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்த வேளையில் அந்த குழந்தையின் இரண்டு கால்களில் ஒரு கால்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டேன்,,
நான் சற்று முன்னோக்கி சென்று அக்குழந்தையின் கால்களை சற்று உற்று பார்த்த பின் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று…
உடனே அந்த குழந்தையின் தந்தையிடம் சிக்னல் முடிந்தவுடன் வண்டியை சற்று ஓரமாக நிறுத்துங்கள் உங்கள் குழந்தையை பற்றி சிறிது பேசவேண்டும் என்று கூறியதும் அவரும் வண்டியை சற்று ஓரமாக நிறுத்தினார்..
முதலில் எங்களை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, பிறகு அவருடைய குழந்தையின் கால்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்,,
அந்த பெண் குழந்தை பிறக்கும் போதே ஒரு கால் ஊனமாக தான் பிறந்தது என்றும் கால்களை சரி செய்ய தனியார் மருத்துவமனையில் லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்யும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்,, சரி இதெல்லாம் ஏன் கேக்கறீங்க என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்…
நான் என் மகனை அவரிடம் காண்பித்து என் மகனின் கால்கள் எப்படி உள்ளது என கேட்க, அவரும் நன்றாக தான் உள்ளது என்று கூறினார்..
பிறகு நான் என் மகனை பற்றிய விவரங்களை அவரிடம் கூற ஆரம்பித்தேன்,,
என் மகனின் பெயர் அர்சத்,, பவானி அரசு மருத்துவமனையில் பிறக்கும் போதே இவனுக்கு இரண்டு கால்களும் ஊனம் உங்கள் மகள் போலவே தான் என் மகனுக்கும் கால்கள் ஊனமாக பிறந்தான்.
இதுக்கு கணுக்கால் உள்வளைவு ஊனம்னு (clubfoot) சொல்லுவாங்க,, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து குணமாக்கிவிட்டோம் என்று கூறியதும் அவர் சற்று அதிர்ச்சி அடைந்து இதை எப்படி சரி பண்ணிங்க தெளிவா சொல்லுங்க நானும் என் மகளுக்கு சரி பண்ணனும்னு கேட்க ஆரம்பித்தார்..
மகன் ஊனமாக பிறந்து விட்டானே என்று நானும் உங்களை போல தான் மனவேதனையில் திகைத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வேளையில், என் மகன் பிறப்பதற்கு முன்பு ஒரு பதிவை வாட்ஸப் குழுவில் சேர் செய்தது நினைவுக்கு வந்தது,
அந்த பதிவை மீண்டும் தேடி பார்த்த பொழுது அது கணுக்கால் உள்வளைவு ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற பதிவு,,நான் பகிர்ந்த பதிவு கடைசியில் எனக்கே தேவைப்பட்டது..
அந்த பதிவில் இருந்த அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்,, மறுமுனையில் பேசியவர்கள் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூற, நானும் என் மனைவியும், பிறந்து 7 நாள் மட்டுமே ஆன இவனை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தோம்.
என் மகனை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கால் பாதங்களை வளைத்து மாவுகட்டு போட ஆரம்பித்தார்கள். போடப்பட்ட மாவுகட்டுகளை அடுத்த வாரம் வரைக்கும் வைத்து இருக்கவேண்டும்,, பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் மாவுகட்டுகளை அவிழ்த்து புதிய மாவுகட்டுகளை கட்டுவார்கள்,, இப்படி ஒவ்வொரு மாவுகட்டுகளை கட்டும் பொழுதும் கால் பாதத்தின் மேல் பகுதி எலும்புகளை நேராக வளைத்து கட்டு கட்டுவார்கள்.
வாரத்திற்கு ஒரு மாவுகட்டு, இப்படி 15 வாரம் பவானில இருந்து வந்து கட்டு போட்டு போவோம். அப்புறம் 15 மாவுகட்டு முடிஞ்சதும் குழந்தையோட இரண்டு குதிங்கால் மேல் பகுதியிலும் அறுவைசிகிச்சை செய்து ஒரு வாரம் மருத்துவமனைல தங்கினோம்,,
அதுக்கு அப்புறம் ஒரு ஷூ கொடுப்பாங்க அதை தினமும் போடுகிட்டே வந்தோம்,, குழந்தைகள் வளர வளர ஷூ வும் இலவசமாவே மாத்தி கொடுதாங்க,, இப்படி 5 வயசு வரைக்கும் ஷூ போட்டு வந்த கண்டிப்பா குணம் ஆகிடும்,,
நாங்கள் இப்பொழுது 3 வருடங்களாக சிகிச்சைக்கு வந்து கொண்டு இருக்கிறோம் இப்ப கூட நாங்க மருத்துவமனைக்கு செல்ல தான் வந்து இருக்கின்றோம் என்று சொல்லி முடிச்சதும் அவர் முகத்துல கொஞ்சம் சந்தோசத்துடன் இருந்தார்.. அவர் என் மகளின் கால்களை சரி செய்ய எனக்கு உதவுங்கள் என்று கேட்க நானும் அவரை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றேன்,, அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கான விளக்கங்களை அறிந்து கொண்டு தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவுசெய்து உள்ளார்..
இவரை போன்று சில பேர் இந்த கணுக்கால் ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் உள்ளனர்,,
அவர்களுக்கான பதிவு தான் இது..
தற்பொழுது என் மகன் குணமடைந்து மற்ற குழந்தைகளை போலவே ஓடியாடி விளையாடுகிறான்..
இது போன்று கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நீங்கள் காண நேர்ந்தால் எனக்கு தெரிவிக்கவும்..
இதை துரை மோகன்ராஜ் என்பவர் முகநூலில் பதிவு செய்து இருக்கிறார் https://www.facebook.com/durai.mohanraj.9