சிறுவர் கடத்தலை மையமாகக் கொண்ட கார் பிராங்க் வீடியோக்கள் பரவல்.. யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வைரலான வீடியோக்களை ஆர்வமாகப் பார்க்கும் சிறுவர் சிறுமியரைக் குறிவைக்கும் சமூக ஊடக கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கார் பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் காரில் சிறுவர்கள் கடத்தப்படும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. காரில் லிப்ட் கொடுப்பதாக சிறுவரை ஏற்றி பின்னர் அவர்கள் கடத்தப்பட்டதாகக்கூறுவது போல இந்த வீடியோக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காரில் இருந்து சிறுவன் தப்ப முயற்சிப்பதும், காரின் கதவு லாக் ஆகியிருப்பதும், மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக உள்ள இந்த வீடியோக்களில் மீம்ஸ் இசை மற்றும் நகைச்சுவை அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வைரல் வீடியோக்களை லட்சக்கணக்கான பதின்பருவத்து சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் பார்ப்பதால் பெற்றோரை எச்சரிக்க வேண்டும் எனவும், யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.