போலி” பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பு- கர்நாடகா சட்டசபை தேர்தலில் சுவாரசியம்!bjp
'போலி” பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பு- கர்நாடகா சட்டசபை தேர்தலில் சுவாரசியம்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போலி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநில சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள்.
கர்நாடகா தேர்தல் களம் கடந்த சில மாதங்களாகவே அனலடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஜேடிஎஸ் 93 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக வரும் 8-ந் தேதி வேட்பாளர்களை முடிவு செய்து அறிவிக்க உள்ளது.
கர்நாடகாவிலும் தேர்தலுக்கு முன்பு கட்சி மாறும் படலங்கள் அரங்கேறி வருகின்றன. ஜேடிஎஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.எல்.ஏ. காங்கிரஸுக்கு தாவத் தொடங்கி உள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்து வருவதால் காங்கிரஸ் பக்கம் அலையடிப்பதாக களத் தகவல்களும் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் 100 வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டதாக நேற்று திடீரென பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதனால் பல இடங்களில் குழப்பமும் ஏற்பட்டது. இந்தப் பட்டியல் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டது. பின்னர்தான் பாஜக மேலிடம் தலையிட்டு இது போலி வேட்பாளர் பட்டியல் என விளக்கம் தந்தது.