தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல், சிவில் பாடப்பிரிவு நிறுத்தம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில்  தமிழ் வழி பாடப்பிரிவுகளான  மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மொழியில் பொறியியல் படிப்பு

தமிழ் உள்ளிட்ட எட்டு பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளைப் பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அனுமதி அளித்தது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலமான 2006 முதல் 2011 ஆம் ஆண்டு காலத்தில்  ஒரு சில அரசு கல்லூரிகளில், சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது இந்தநிலையில் கூடுதலாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளில் அறிமுக நிலையில் மாணவர்கள் ஆர்வமாக சேர்ந்த நிலையில் பின்னர் வேலை வாய்ப்பு என்று வரும் பொழுது ஆங்கிலம் பிரதான மொழியாக உள்ளதால் வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது.

மெக்கானிக்கல், சிவில் வகுப்பு நிறுத்தம்

இதன் காரணமாக தமிழ் மொழி பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கையானது குறைந்து காணப்பட்டது. தமிழ் வழி பாடப்பிரிவுகள் ஒரு சில மாணவர்களோடு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.இந்தநிலையில் தான் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில்  தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன் படி 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளையும் மூடுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இந்த பாடப்பரிவில் தமிழ் மொழியில் படிக்க மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *