தமிழக பட்டாசு குடோனில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்டாசு சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒன்பது பேர் இறந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஜூலை 30 ஞாயிற்றுக்கிழமை, தடயவியல் துறையினர், குடோனுக்கு அடுத்ததாக அமைந்துள்ள உணவகத்தில் இருந்து எரிவாயு சிலிண்டர் வெடித்ததை வெளிப்படுத்தினர்.

இந்த சோக சம்பவம் சனிக்கிழமை காலை நடந்தது. முதலில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீ மளமளவென பட்டாசு குடோன் மற்றும் உணவகத்தை ஒட்டிய வெல்டிங் கடைக்கும் பரவியது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில்– குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திக்கா மற்றும் மகன் ருத்திஷ்; குடோன் அருகே உணவகம் நடத்தி வந்த ராஜேஸ்வரி; அப்பகுதியில் வெல்டிங் கடை வைத்திருந்த இப்ராகிம் மற்றும் இம்ரான்; தண்ணீர் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த சரசு மற்றும் ஜேம்ஸ் கொல்லப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்து இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதே நாளில் அந்த இடத்தில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் முறையே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *