வலியை தாங்கிக்கொண்டு சொந்த ஊர் போய்விட கிளம்பிய இளைஞர்.. சென்னையில் பிரிந்த உயிர்
சென்னை: வலியை தாங்கிக்கொண்டு சொந்த ஊர் போய் விடலாம் என கிளம்பிய இளைஞர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த போது, ஆட்டோவிலேயே மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ், இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவினாஷ்க்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஊருக்கு போய்விடலாம் என்று நினைத்து கோயம்பேடுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி மடிப்பாக்கத்தில் இருந்து ஆட்டோவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் வந்ததும் ஆட்டோ டிரைவர் , அவினாஷை இறங்க சொல்லிய போது, அவர் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் கோயம்பேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கோயம்பேடு போலீசார் தகவலின் பேரில் நேரில் வந்தனர். ஆட்டோவில் இறந்துகிடந்த அவினாஷின் உடலை கைப்பற்றி அவர் யார் என்று விசாரணை நடத்தினார்கள்.. அப்போது தான் போலீசாருக்கு அவர் யார் என்பது தெரியவந்தது.
பொள்ளாச்சியை சேர்ந்த அவினாஷ், உடல் நிலை சரியில்லாத நிலையில் உறவினர் வீட்டில் இருந்து கோயம்பேடு புறப்பட்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. அப்படி செல்ல முயன்ற போது ஆட்டோவிலேயே உயிர் பிரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவினாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களுக்கும் இது தொடர்பாக தகவலை கூறினார்கள்.
இதையடுத்து அவினாஷின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து நேரில் வந்து கதறி அழுதனர். வலியை தாங்கிக்கொண்டு சொந்த ஊர் போய் விடலாம் என கிளம்பிய இளைஞர், உயிரிழந்த சம்பவம் கோயம்பேடு பேருந்து நிலையப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.