”மக்கள் ஆட்சி மலரட்டும்”! மதுரையில் விரைவில் மாநாடு! 2026க்கு அச்சாரம்? விஜய் ரசிகர்கள் போஸ்டர்!
மதுரை: மக்கள் ஆட்சி மலரட்டும்; மதுரையில் விரைவில் மாநாடு என்ற முழக்கத்துடன் நடிகர் விஜய் ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் திமுக, அதிமுக, வேட்பாளர்களுக்கே கடும் டஃப் கொடுத்தனர். நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது படத்தையும் கொடியையும் மட்டுமே பயன்படுத்தி இந்த வெற்றியை அவர்கள் சாத்தியப்படுத்தினர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட முழுமையாக இல்லாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின்ம் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்ஸி ஆனந்த், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை வரும் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் சந்தித்து பேசுகிறார் நடிகர் விஜய். அன்றைய தினம் அவர்களுக்கு அறுசுவை பிரியாணி விருந்தும் கொடுக்கவுள்ளார்
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர நிர்வாகிகள், மக்கள் ஆட்சி மலரட்டும்; மதுரையில் விரைவில் மாநாடு என்ற முழக்கத்தை முன் வைத்து போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றனர். குறிப்பாக மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்னதான் பந்தமோ தெரியவில்லை, ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் வித்தியாசமான போஸ்டர் அடிப்பதற்காகவே மதுரையில் ஏராளமானோர் இருக்கின்றனர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளை பார்த்தால் நாடாளுமன்றத் தேர்தலை பெரியளவில் கவனத்தில் கொள்ளாமல் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, பாக்கியராஜ், சரத்குமார், நெப்போலியன், விஜயகாந்த், கமல் என ஏராளமான திரை பிரபலங்கள் நடிகர் என்பதிலிருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.