விவாகரத்து கொண்டாட்டம்: திருமண முறிவு குறித்த இந்திய பெண்களின் அணுகுமுறை மாறுகிறதா?
இந்தியாவில் திருமணம் என்பது வாழ்நாள் பந்தமாகப் பார்க்கப்படுகிறது.
வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக திருமணத்தில் விரிசல் ஏற்பட்டால் அவற்றை பொறுத்துக்கொள்ளுமாறு பாரம்பரியத்தின் பெயரால் பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கஷ்டமான திருமணங்களில் சிக்கித் தவிக்கும் பெண்களிடம், கணவரைப் பிரிந்தால் சமூகம் என்ன சொல்லும் என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.
இந்த அழுத்தம் மூலம் சகித்துக்கொள்ள முடியாத உறவின் பிடியில் அவர்களைச் சிறைவைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பெண் பந்தத்தை உடைத்து விவாகரத்து செய்ய முடிவு செய்தால், சமூகம் அவரைக் குறை சொல்ல முயல்கிறது.
ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தப் பெண்கள் விவாகரத்து பெறுவது மட்டுமின்றி சமூக ஊடகங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் விவாகரத்து விகிதம்
நடிகையும், ஆடை வடிவமைப்பாளருமான ஒருவரின் பதிவு சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது.
“மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே மோசமான திருமணத்தை விட்டு விலகுவது சரிதான். ஒருபோதும் குறைவானதில் திருப்தி அடைய வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் முடிவுகளை நீங்களே எடுங்கள். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வேர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது ஆசிய நாடுகளில் திருமண உறவுகள் குறைவாக முறிகின்றன.
இந்தியாவில் ஒரு சதவீத விவாகரத்து விகிதம் உள்ள நிலையில், வியட்நாம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 7 சதவிகித திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
சமீப காலமாக பெண்கள் விவாகரத்து பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளது, தற்போது விவாகரத்து பற்றிய கருத்து மாறி வருவதைக் காட்டுகிறதா?
விவாகரத்தை இயல்பானதாக மாற்ற வேண்டும்
விவாகரத்து நிபுணரான டாக்டர் சுசித்ரா தால்வி, ‘ரோட்மேப் டு மேனேஜிங் டைவர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இவர், பெண்களுக்கு உணர்வுபூர்வமாக உதவுவதோடு, அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் உதவுகிறார்.
மேலே குறிப்பிட்ட நடிகையைப் போல சலுகைகள், வசதிகள் உள்ள சில பெண்கள், திருமணத்தில் பிரச்னை என்றால் அதன் தீர்வு விவாகரத்து என்று இவ்வாறு கொண்டாடியபடி சொல்கிறார்கள் என்கிறார் டாக்டர் சுசித்ரா தால்வி.
ஆனால் எந்தவொரு கட்டுப்பாட்டையும் அதை இயல்பாக்கிய பின்னரே அகற்ற முடியும் அல்லது நீக்க முடியும்.
முப்பது ஆண்டுகள் திருமண பந்தத்தில் வாழ்ந்த அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார்.
“தீண்டாமை மற்றும் வரதட்சணை போன்ற பிரச்னைகள் பற்றி விவாதிக்கத் தொடங்கியபோது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் இதைப் படிப்படியாகவே இயல்பாக்க முடியும். இது தடை செய்யப்பட்டதாக இல்லை என்று சொல்வது கடினம்,” என டாக்டர் சுசித்ரா தால்வி கூறுகிறார்.
இளைஞர்கள் மத்தியில் முடிவுக்கு வரும் ’களங்கம்’
வழக்கறிஞர் வந்தனா ஷா விவாகரத்து வழக்குகளை எடுத்து நடத்துகிறார்.
2011இல் விவாகரத்து பெற்றபோது விருந்து வைத்ததாக மும்பையில் வசிக்கும் அவர் ஃபோனில் சிரித்தபடி கூறினார்.
இந்த விருந்துக்கு வந்த விருந்தாளிகளிடம் தனது விவாகரத்து மனுவை தீயில் போட்டு எரிய விடுமாறு அவர் சொன்னார்.
வந்தனா ‘தி எக்ஸ்-ஃபைல்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
“கடந்த 15 ஆண்டுகளாக நான் பார்த்ததில் இப்போது பெண்கள் விவாகரத்து பற்றி தங்கள் நண்பர்களுடன் விவாதிக்கும் மாற்றத்தை நான் காண்கிறேன். விவாகரத்து தொடர்பாக நிலவும் களங்கம் இளைஞர்கள் மத்தியில் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.”
“பெண்கள் நண்பர்களின் ஆதரவைப் பெற்ற பிறகு பெற்றோரிடம் வருகிறார்கள். பின்னர் அவர்களுடன் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அவர்களின் முடிவை பெற்றோர் ஏற்பதை எளிதாக்குகிறது,” என்று மோசமான திருமண அனுபவத்தைச் சந்தித்த வந்தனா ஷா கூறுகிறார்.
இதுபோன்ற சமூக மற்றும் கலாசார மாற்றங்கள் சமூகத்தில் காணப்படுகின்றன. அதாவது உங்கள் நண்பர்கள் குழு மேலே செல்லுங்கள் என்று கூறுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள் என்று பெற்றோர்கள் இப்போதும் சொல்கிறார்கள். விவாகரத்துக்குப் பிறகு பெண்களின் எதிர்காலம் மோசமாகிவிடும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.
விவாகரத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
விவாகரத்து கிடைத்து பல வருடங்கள் ஆகியும்கூட இன்னும் அதன்மீது ஒரு ’கறை’ இருப்பதாக வந்தனா கூறுகிறார்.
”குடும்ப நீதிமன்றத்தில் என் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, 15-20 விவாகரத்து வழக்குகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 70-80 வழக்குகள் வருகின்றன. அதேநேரம் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மிகவும் முற்போக்கானதாக மாறி வருவதையும் பார்க்க முடிகிறது,” என்றார் அவர்.
சமீபத்தில் ஒரு விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதன் கீழ் விவாகரத்து பெற இனி தம்பதிகள் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உடனடியாக திருமணத்தை ரத்து செய்ய முடியும் என்று கூறியிருந்தது.
ஆனால் திருமணம் மீட்கமுடியாத அளவிற்கு முறிந்துவிட்டதாக நீதிமன்றம் முழுமையாகத் திருப்தியடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
அதாவது கணவன்-மனைவி இடையே நல்லிணக்கத்திற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் முடிந்துவிட்டன, மேலும் அவர்களுக்கிடையிலான உறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை இருக்கவேண்டும்.
சமூகத்தில் மாற்றம்
சமீபத்தில் கணவரைப் பிரிந்த ரோஷ்னி உணர்வுபூர்வமாக உடைந்து போயுள்ளார்.
டெல்லியில் வசிக்கும் ரோஷ்னிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இரண்டு ஆண்டுகளில் தான் உணர்வுபூர்வமான, பொருளாதார மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும், பின்னர் கர்ப்பமானதும் தனது தாய் வீட்டிற்குத் திரும்பியதாகவும், அதன் பிறகு மாமியார் வீட்டிற்குப் போகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
”திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை என் பிரச்னைகளை பெற்றோரிடம் சொல்லவே இல்லை. நான் என் தாய்வீட்டிற்குத் திரும்பியதும் என் கணவர் தொலைபேசியில் கெட்ட வார்த்தைகளால் ஏசுவார். என் பெற்றோரையும் உறவினர்களையும்கூட விட்டு வைக்கவில்லை. இதன் பின்னர் நான் இந்த துன்புறுத்தல்கள் பற்றி பெற்றோரிடம் வெளிப்படையாக பேசினேன்,” என்கிறார் அவர்.
தன் கணவர் தன்னுடைய பெயரை ஓர் இணையதளத்தில் போட்டதாக ரோஷ்னி கூறுகிறார். அதன் பிறகு அவருக்கு மோசமான அழைப்புகள் வர ஆரம்பித்தன.
அதன்பிறகு ரோஷ்னி போலீசில் வழக்குப் பதிவு செய்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
ரோஷ்னி ஒரு விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது தனது குழந்தை மீது கவனம் செலுத்த விரும்புகிறார்.
தான் மன அழுத்தத்தால் அவதிப்படுவதாகவும், மீண்டும் மற்றொரு உறவில் ஈடுபட விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
விவாகரத்து செய்ய முடியாத கட்டாயம்
குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு வீட்டின் பொறுப்பு, குடும்பத்தை கவனித்தல் போன்றவை சொல்லித் தரப்படுகின்றன. ஆனால் இந்த உறவில் ஏதாவது துன்புறுத்தல் நிகழ்ந்தால் அதை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்பது பற்றிப் பேசப்படுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருமண வாழ்க்கையில் விவாகரத்து என்ற வார்த்தைப் பிரயோகம் தவிர்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் இந்தத் திசையில் ஒரு படி முன்னேறினால், அவள் அங்கேயே நிறுத்தப்படுகிறாள்.
சென்னையில் வசிக்கும் ஷாஸ்வதி சிவா, 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு விவாகரத்து ஆனவர்களுக்கு உதவ ஒரு குழுவையும் உருவாக்கினார்.
இந்தக் குழுவில் உள்ளவர்கள், ஒருவர் சொல்வதைக் கேட்பதன் மூலமோ அல்லது ஒரு நிபுணரைப் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலமோ உதவுகிறார்கள்.
“என் குடும்பத்தின் முழு ஆதரவும் எனக்குக் கிடைத்தது. நான் விவாகரத்தைக் கொண்டாடினேன். ஆனால் எல்லோருக்கும் அத்தகைய ஆதரவு கிடைப்பதில்லை. பலர் விவாகரத்து செய்ய முடியாமல் உறவுகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” என்று அவர் கூறுகிறார்.
விவாகரத்து பற்றிய சிந்தனையில் மாற்றம் உள்ளது என்றும் ஆனால் அது மெதுவாக உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் விவாகரத்து குறித்து வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. பெண்கள் மத்தியில் தங்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் விவாகரத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் நிச்சயம் உருவாகும்.