செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு.. ஐடி கார்டை காட்டுமாறு சுற்றி வளைத்த ஆதரவாளர்கள்.
கரூர்: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் பெண் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்டு அவர்களை திமுக தொண்டர்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ளார். இவருடைய வீடுகள், இவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வரும் இந்த சோதனையால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் உள்ள இந்த நேரத்தில் ஐடி ரெய்டு நடத்துவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எல்லாம் பக்கமும் எதிர்ப்பு இருக்கு - குபேந்திரன், அரசியல் விமர்ச்கர்.
அது போல் கேரளா, ஹைதராபாத்திலும் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இல்லத்திலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த ஐடி ரெய்டு சோதனையை அறிந்த ஏராளமான திமுக தொண்டர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடிவிட்டனர்
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசனும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில் ஐடி ரெய்டுக்கு வந்த அதிகாரிகள் காரில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுக்க வந்தனர்.
அப்போது அவர்களை 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு பெண் அதிகாரிகயை சுற்றி வளைத்து ஐடி கார்டுகளை காட்டுமாறு திமுக தொண்டர்கள் கேட்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து வருமான வரித் துறையினர் வந்த காரையும் திமுகவினர் சேதப்படுத்திவிட்டனர். காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி வருகிறார்கள். கரூரில் உள்ள செந்தில் பாலாஜி நண்பர் வீடு, கோவையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடு என ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 கோடிக்கு மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.