‘ஃபர்ஹானா’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை; படிப்பினைகள் உள்ளன: எஸ்டிபிஐ அறிக்கை 

சென்னை: ‘ஃபர்ஹானா’ படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது இஸ்லாமிய சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை என்று எஸ்டிபிஐ கட்சி .அறிக்கை வெளியிட்டுள்ளது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது இப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டின. கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘ஃபர்ஹானா’ படத்தின் சிறப்புக் காட்சி இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுக்காக நேற்று திரையிடப்பட்டது. இதில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர்.

பின்னர் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘ஃபர்ஹானா’ திரைப்பட குழுவினரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக சிறப்பு ஏற்பாடு செய்யபட்ட நிலையில், பல சமூக தலைவர்களும் பங்கேற்ற போது எஸ்டிபிஐ கட்சி சார்பாக நானும் மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டு அப்படத்தை பார்த்தோம். படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை. எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கருதுகிறேன் .

ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு, இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார். அதில் சில படிப்பினைகளும் உள்ளன. மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ‘ஃபர்ஹானா’ பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *