திமுகவின் புதிய உருட்டு; சர்ச்சையில் இருந்து தப்பிக்க பெண் அமைச்சருக்கு தயாரான டம்மி பொறுப்பு!!

தமிழக அமைச்சரவை எந்த நேரமும் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆதி திராவிடர் துறை அமைச்சராக இருக்கும் கயல்விழிக்கு தமிழக அரசு சார்பாக வாரிய தலைவர் பதவி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற போது அவருடன் 33 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசு ஊழியரை ஜாதியை குறிவைத்து திட்டிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கண்ணப்பன், போக்குவரத்து துறையில் இருந்து மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் துறை வழங்கப்பட்டது. மேலும் சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு  வழங்கப்பட இருப்பதாக நீண்ட காலமாக தகவல் பரவிய நிலையில் கடந்த ஆண்டு உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அப்போது சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்களின் இலாக்காக்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது.

புதிய அமைச்சர்கள் யார்.?

இந்தநிலையில் அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டும், புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டாலும் அமைச்சர் நீக்கம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் 2 ஆண்டு ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில் 3 ஆம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்த வைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆதி திராவிடர் துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ், பால்வளத்துறை அமைச்சர் நாசர், சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் பெயர் அடிபட்டது. இந்தநிலையில் உதயநிதி மற்றும் சபரீசன் தொடர்பாக ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதி அமைச்சர் பிடிஆரின் பெயரும் தற்போது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. புதிதாக ஆதி திராவிட துறை அமைச்சராக தமிழரசியையும், நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசையும், தொழில்துறை அமைச்சராக டிஆர் பாலுவின் மகனான டிஆர்பி ராஜாவிற்கும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

வாரிய தலைவர்- தமிழக அரசு உத்தரவு

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஆதிதிராவிடத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ்க்கு புதிதாக தமிழக அரசு பொறுப்பு வழங்கவுள்ளது, கயல்விழி செல்வராஜை தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக நியமித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவராக செ.கனிமொழி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிட அமைச்சர் மாற்றப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அவருக்கு வேறு ஒரு பொறுப்பு வழங்கி சர்ச்சையை சமாளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *