ஆக.10-ல் ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 11-ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வெளியாவது குறிப்பிடத்தகது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படம் வெளியாகிறது.
இதனிடையே சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ மற்றும் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் வெளியாக உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ‘மாவீரன்’ என்ற பெயரில் ரஜினி நடிப்பில் 1986-ம் ஆண்டு படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது