நிலக்கரி சுரங்க ஏலம்! நேற்று காட்டமாக ஸ்டாலின் கடிதம்! இன்று சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
நிலக்கரி சுரங்க ஏலம்! நேற்று காட்டமாக ஸ்டாலின் கடிதம்! இன்று சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை: நிலக்கரி சுரங்கங்கள் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் திமுக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அது போல் அதிமுக சார்பில் அருண்மொழித்தேவன் எம்எல்ஏவும் கொண்டு வந்தார். உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6ஆவது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில் சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7ஆவது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது
அதன்படி ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் தஞ்சை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
தஞ்சையில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டிஎடுக்க திட்டமிட்டுள்ளது. அது போல் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 நாடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு மாநில அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை. ஒப்புதலும் பெறவில்லை.
இது போன்ற முக்கியமான விஷயத்தில் மாநில அரசுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது துரதிருஷ்டவசமானது. நிலக்கரி சுரங்க நில ஏலம் விவகாரத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துளளார். இந்த நிலையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் சார்பில் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அது போல் தமிழக சட்டசபையில் இன்று மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஆகியோர் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.