இந்தா வந்துட்டாருல ஹர்பஜன் சிங்.. சிஎஸ்கே வென்ற சில நிமிடங்கள்.. தமிழில் பதிவிட்ட மிரட்டல் ட்வீட்!
சென்னை: சிஎஸ்கே உடன் விளையாடுவதும், ஆபத்திடம் ஆதார் கேட்பதும் ஒன்று என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேபோல், ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி பந்தயம் அடிப்பது உறுதி என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 16வது ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை அணி சேப்பாக்கத்தில் களமிறங்குவதால், நிச்சயம் சென்னை அணி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், சென்னை அணியை முதல் பேட்டிங் செய்ய பணித்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, 217 ரன்கள் குவித்தது.
சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 57, டெவன் கான்வே 47, ராயுடு 27*, துபே 27 என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினர். இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றிக்கு சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வழக்கமாக தமிழில் தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், சார் ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல எம்எஸ் தோனி இந்த முறை ஐபிஎல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. சிஎஸ்கே கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் தோனியின் சிக்சர் பற்றி ட்வீட் செய்துள்ள ஹர்பஜன் சிங், விண்டேஜ் தோனி என்றும் குறிப்பிட்டுள்ளார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிஎஸ்கே வீரர் மொயின் அலியை பற்றி, முழு நேர ஸ்பின்னரை போல் மொயின் அலி பந்துவீசியுள்ளார். அவரது பந்தில் ப்ளைட், டிரிஃப்ட், ஸ்பின் மூன்றும் இருந்தது என்று பாராட்டியுள்ளார். ஹர்பஜன் சிங்கும் ட்விட்டர் பதிவுகள் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.