கேரளா ரயில் தீ வைப்பு- மாவோயிஸ்டுகள், மத பயங்கரவாதிகள் சதியா? குழப்பும் இந்தி ‘கோட் வேர்ட்’!
கேரளா ரயில் தீ வைப்பு- மாவோயிஸ்டுகள், மத பயங்கரவாதிகள் சதியா? குழப்பும் இந்தி 'கோட் வேர்ட்'!
திருவனந்தபுரம்: கேரளா ரயிலில் பயணிகளை தீ வைத்து படுகொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மாவோயிஸ்டுகள் அல்லது மத பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் ரயில் நிலையங்களைக் குறிப்பிட்டு கணித குறியீடுகளுடனான பேப்பர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலத்தில் உள்ள இந்த பேப்பர், சதிகாரர்களின் கோட் வேர்டாக இருக்குமோ? என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஆலப்புழா- கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்த நிலையில் ரயில் சென்று கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் சக பயணி மீது தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார்.
இச்சம்பவத்தில் பயணிகள் 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது தண்டவாளத்தில் 3 உடல்கள், தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. தவ்பீக், ரெஹானா மற்றும் ஒரு குழந்தை ஆகியோரது உடல்களே தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்டன.
ரயிலில் பயணம் செய்த நபர், எதிரே உட்கார்ந்திருந்த தவ்பீக், ரெஹ்னா உள்ளிட்டோர் மீது ஸ்பிரே மூலம் பெட்ரோல் தெளித்துள்ளார். பின்னர் அவர்கள் மீது தீ வைத்து விட்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். அந்த ரயிலை பின் தொடர்ந்து டூ வீலரில் வந்தவருடன் அந்நபர் தப்பி சென்றார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டனர்.