கொரோனா கோரத்தாண்டவம் ஆடுகிறது.. மா.சு.பகீர் தகவல்.. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்
சென்னை: நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா மீண்டும் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கடந்த 2019 ஆண்டு இறுதியில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை கொரோனா வைரஸ் உலக மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். லட்சக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் படிப்படியாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பல நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. உலக மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழத் தொடங்கி விட்டனர். உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையிலும் மீண்டும் மீண்டும் புது புது கொரோனா வைரஸ் நோய்கள் உருவாகி பரவி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்றைய தினம் 2வது நாளாக மூவாயிரத்தை தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் நேற்று 3,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,509லிருந்து 15,208ஆக உயர்ந்துள்ளது. இது 0.03 சதவீதமாகும். கொரோனாவில் இருந்து நேற்று 1,396 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1,390 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,41,69,711 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். ஆகவே தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம் ஆக உள்ளது.. கொரோனா தொற்று பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,30,867 ஆக அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு 1.19% பேர் பலி ஆகி உள்ளனர். நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220,65,99,034 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 6,553 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 123 பேர் கொரோனா பாதிப்புள். இதில் 66 ஆண்கள் மற்றும் 57 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கும்,செங்கல்பட்டில் 13 பேருக்கும், சேலத்தில் 12 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 27 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் 11 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் மீண்டும் தாண்டவம் ஆடுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை; கொரோனா வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினார். கொரோனா மீண்டும் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.