தங்க நகைகளுக்கு நாளை முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்: மீறினால் 5 மடங்கு அபராதம்
ஏப்ரல் 1 முதல் HUID இல்லாமல் தங்கம் வாங்க முடியாது.. இந்த டேக் என்ன? ஏன் முக்கியமானது?
HUID என்றால் என்ன, தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களில் இது ஏன் முக்கியமானது? புதிய விதி நுகர்வோர் நலன் என்று அரசாங்கம் கூறுவது ஏன்? இது குறித்து இங்கு பார்ப்போம்.
ஏப்ரல் 1 முதல் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (Hallmark Unique Identification-HUID) இல்லாமல் தங்க நகைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் நிதி கரே கூறுகையில், நுகர்வோர் நலன் கருதி 2023 மார்ச் 3-க்குப் பிறகு HUID இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்க நகைகளில் HUID எண் என்ன?
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, HUID எண் என்பது 6 இலக்க எண்ணெழுத்து குறியீடு ஆகும். ஹால்மார்க்கிங் போது ஒவ்வொரு தங்க நகைக்கும் வழங்கப்படுகிறது. தங்கத்தை தனித்தனியாக அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. அசேயிங் & ஹால்மார்க்கிங் மையத்தில் மெசின் உதவுகள் இல்லாமல் கையால் இந்த தனித்துவ எண்கள் முத்திரையிடப்படுகின்றன.
HUID தனித்தனி நகைகளை அடையாளம் காண பயன்படுத்துகிறது. எளிதாக நகைகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. , மேலும் இது தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
“HUID அடிப்படையிலான ஹால்மார்க்கிங் நகைக்கடைகளின் பதிவு தானியங்கி முறையில் செய்யப்படுகிறது. இது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளின் தூய்மையை உறுதி செய்வதையும், ஏதேனும் முறைகேடுகளைச் சரிபார்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. HUID ஒரு பாதுகாப்பான அமைப்பு மற்றும் தரவு தனியுரிமை அல்லது பாதுகாப்புக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருகிறது, நுகர்வோரின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது என்று நுகர்வோர் விவகாரத் துறை இணையதளம் கூறுகிறது.
தங்க நகைகளை ஹால்மார்க் செய்வது ஏன் முக்கியம்?
ஹால்மார்க் செய்யும் நேரத்தில் நகைகளின் மீது HUID முத்திரையிடப்படும். ஆனால் ஹால்மார்க்கிங் என்றால் என்ன?
“ஹால்மார்க் என்பது தங்க நகைகளின் மீது ஒரு அடையாளமாகும், இது அதன் நேர்த்தியையும் தூய்மையையும் உறுதி செய்வதற்காக இந்திய தரநிலைகளின் பணியகத்தால் (BIS) அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் பதியப்படுகிறது. எனவே, நீங்கள் எந்த தங்க நகைகளை வாங்கினாலும், ஏமாற்றப்படாமல் இருக்க ஹால்மார்க்கைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறது.
இந்த அடையாளத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?
BIS ஹால்மார்க் மூன்று சின்னங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். BIS லோகோ, நகைகளின் தூய்மை மற்றும் நேர்த்தியைக் குறிக்கும் சின்னம், பின்னர் HUID எண் பதியப்பட்டிருக்கும்.
எந்த தங்க நகைகளும் 100 சதவீதம் தங்கத்தால் செய்யப்படுவதில்லை, ஏனெனில் மஞ்சள் உலோகம் மிகவும் மென்மையானது மற்றும் நகைப் பொருட்களாக வடிவமைக்க மற்ற உலோகங்களுடன் கலக்க வேண்டும். “தூய்மையான” நகைகள், அதாவது, ஒரு நகையில் எவ்வளவு தங்கம் இருக்கிறதோ, அவ்வளவு விலை உயர்ந்ததாக அது இருக்கும்.
ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளின் மூன்று பிரிவுகள்: 22K916 என்றால் அது 22 காரட் தங்கம் மற்றும் நகையில் 91.6 சதவீதம் தங்கம் உள்ளது என்று அர்த்தம். அதே 18K750 என்றால் அது 18 காரட் தங்கம் மற்றும் நகையில் 75 சதவீதம் தங்கம் உள்ளது. 14K585 என்றால் அது 14 காரட் தங்கம் மற்றும் நகையில் 58.5 சதவீதம் தங்கம் உள்ளது என்று அர்த்தமாகிறது.
ஹால்மார்க் செய்வதன் நன்மைகள் என்ன?
நுகர்வோர் தான் வாங்கும் பொருளின் தரம் குறித்து அறிந்து கொள்வர். ஏமாற மாட்டார் என்பதே மிகத் தெளிவான பலன். அதோடு மற்ற நன்மைகளும் உள்ளன. நகைகளின் தரம் உத்தரவாதம் இருப்பதால், அந்த நகையை விற்கும் போது அப்போதைய விலையில் விற்க முடியும். வங்கிகளில் நகை கடன் பெறும்போது வங்கிகள் சிறந்த விதிமுறைகளில் கடன் வழங்க வாய்ப்புள்ளது என்று அரசு கூறுகிறது.