535 கோடி ரூபாய் பணத்துடன் நடு ரோட்டில் பழுதாகி நின்ற லாரி.! அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்- அலர்டான போலீஸ்

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு லாரியில் 535 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட போது தாம்பரம் அருகே லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

535 கோடி பணத்தோடு பழுதாகி நின்ற லாரி

ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதும், மற்ற வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணத்தை தினந்தோறும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரத்தில் உள்ள வங்கிக்கு பணத்தை கொண்டும் செல்லும் பணி நேற்று நடைபெற்றது. நேற்று மதியம் தாம்பரம் அருகே 535 கோடி ரூபாய் பணத்தோடு லாரி சென்ற போது திடீரென பழுதாகி நடு ரோட்டில் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அருகில் உள்ள குரோம்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பான தாம்பரம் சாலை

உடனடியாக அலெர்ட்டான போலீஸ் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியை  அருகில் உள்ள சித்த மருத்துவமனை வளாகத்திற்குள் பாதுகாப்பாக கொண்டு சென்றனர் மேலும் தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தை சரி செய்து விழுப்புரத்திற்கு அனுப்பும் பணியில்  பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் வாகனம் சரி செய்யப்படாததால்  வாகனங்களை சென்னை ரிசர்வ் வங்கிக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். திடீரென பலகோடி ரூபாய் பணத்தோடு வாகனம் பழுதானதையடுத்து வாகனத்திற்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனங்களை மற்றொரு வாகனத்தின் மூலம் இணைந்து மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *