வால்பாறை ஜி.எச்.,ல் ஸ்கேன் வசதி இல்லாததால், பொள்ளாச்சிக்கு 64 கி.மீ., பயணிக்கும் மக்கள்
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில், முறையான ஸ்கேன் வசதி இல்லாததால், அவசர காலங்களில், 64 கி.மீ., துாரம் பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே இயந்திரம் செயல்படாததால், நோயாளிகள் தனியார் கிளினிக்குகள் அல்லது பொள்ளாச்சி ஜி.எச்.,களை நம்பியுள்ளனர். குடியிருப்பு வாசிகள், குறிப்பாக, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஸ்கேன் எடுக்க ஒரு நாள் செலவிட வேண்டியுள்ளது.
வால்பாறை ஜி.எச்., நோயாளிகள் நலக்குழு உறுப்பினர் பரமசிவம் கூறுகையில், ”தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உட்பட, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தனியார் மருத்துவமனை செலவுகளை சமாளிக்க முடியாததால், அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். அவசர காலங்களில், நோயாளிகள் ஸ்கேன் எடுக்க பொள்ளாச்சி ஜி.எச்.,க்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். பொள்ளாச்சியை அடைய கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆகிறது. சேக்கல்முடி, சோலையாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஒன்றரை மணி நேரம் செலவழித்து, வால்பாறை சென்று, அங்கிருந்து பொள்ளாச்சி செல்கின்றனர்.
பொள்ளாச்சி சப் – கலெக்டர், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர், வால்பாறை ஜி.எச்., மருத்துவ அலுவலர், சமூக சேவகர், தன்னார்வ தொண்டு நிறுவனம், வார்டு உறுப்பினர் அடங்கிய நோயாளிகள் நலக்குழு கூட்டம், ஓராண்டுக்கு முன் நடந்தது. சமூக சேவகர் கே.பி.அப்துல் அஜீஸ் கூறுகையில், “மருத்துவமனை நிர்வாகம் பிரசவத்திற்கு முந்தைய ஸ்கேன் செய்வதாகக் கூறுகிறது, ஆனால் அது குறைவாகவே உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் பொள்ளாச்சிக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எனது மகள் கீழே விழுந்ததில் காயம் அடைந்ததை அடுத்து அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். ஆனால் டாக்டர் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு மருத்துவர் வந்தார். நான் கவலையை எழுப்பினேன், இப்போது அவரது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட போலீஸ் வழக்கை நான் எதிர்கொள்கிறேன்.
வில்லோனி தேயிலைத் தோட்டத் தொழிலாளியான எஸ்.முருகனும் இதே கவலையைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “நான் இதய நோயாளி. என் சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.425. வால்பாறை மருத்துவமனையில் முறையான சிகிச்சை வசதிகள் இல்லாததால், ஒவ்வொரு முறையும் பொள்ளாச்சி அல்லது கோவைக்கு செல்ல வேண்டியுள்ளது. அடிப்படை சிகிச்சையைப் பெற கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் ஆகும்.”
மருத்துவ அலுவலர் மகேஷ் ஆனந்தி கூறுகையில், ”மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகளுக்கு ஸ்கேன் செய்கிறோம். மற்ற அவசர தேவைகளுக்கு, பொள்ளாச்சி அல்லது கோவைக்கு பரிந்துரைக்கிறோம். நோயாளிகள் நலக் கூட்டம் நடத்த உயர் அதிகாரிகளின் தகவலுக்காக காத்திருக்கிறோம். விரைவில் நடத்தப்படும்,” என்றார். சுகாதார இணை இயக்குனர் ஆர்.மீரா கூறுகையில், ”ஸ்கேன் எடுக்க, வால்பாறையில் கதிரியக்க நிபுணரை நியமிக்க வேண்டும். கோவை, பொள்ளாச்சியில் மட்டுமே ரேடியாலஜிஸ்ட்கள் உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மழை நீர் ஊருக்குள் புகுந்ததால் எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்தது. விரைவில் சரி செய்யப்படும்,” என்றார்.