வாட்ஸ்அப் மெசேஜை நம்பி ரூ.5 லட்சம் போச்சு! நண்பர் ஏமாந்த கதையைப் பகிர்ந்த ஜீரோதா சிஇஓ நிதின் காமத்
தொழிலதிபர் நிதின் காமத் வாட்ஸ்அப்பில் செய்தியை நம்பி 5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த தன் நண்பரின் கதையைப் பகிர்ந்துள்ளார்.
ஜீரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் கோடீஸ்வரருமான நிதின் காமத், வாட்ஸ்அப்பில் வந்த பகுதி நேர வேலை வாய்ப்பை நம்பி ரூ.5 லட்சம் பணத்தை பறிகொடுத்த நண்பரின் கதையை விவரித்துள்ளார். “விரைவாக நிறைய பணம் சம்பாதிக்க எளிதான வழி எதுவுமில்லை” என்பதுதான் இந்தச் சம்பவத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று காமத் கூறியுள்ளார்.
ஜீரோதா சிஇஓ நிதின் காமத் “எனக்குத் தெரிந்த ஒருவர் மோசடியில் பணத்தை இழந்திருக்கிறார்” என்று கூறி ஒரு நீண்ட ட்விட்டர் பதிவை எழுதியுள்ளார். “வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக வந்த மெசேஜ் மூலம் அந்த மோசடி ஆரம்பமானது. பெரு போல எங்கேயோ உள்ள இடங்களில் இருக்கும் ரிசார்ட்டுகள் மற்றும் உணவகங்களுக்கு போலியான ரிவியூ எழுதியதற்காக முதலில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கிற்கு வந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
“இதே பணிகளைச் செய்வதாகக் கூறிய மற்றவர்களுடன் ஒரு டெலிகிராம் குழு உருவாக்கப்பட்டது. குழுவில் இருந்தவர்கள் போலி கிரிப்டோ இயங்குதளம் மூலம் வர்த்தகம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் மூலம் ஈட்டிய லாபங்களை பணம் எதுவும் செலுத்தாமலே எடுத்துக்கொள்ளவும் குழுவினர் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், க்ரிப்டோ இயங்குதளம் பிட்காயின் போன்றது அல்ல. மோசடி ஆசாமிகள் தங்கள் இஷ்டப்படி க்ரிப்டோ கரன்சியின் மதிப்பை மாற்றி அமைக்க முடியும். இந்நிலையில் டெலிகிராம் குழுவில் உள்ளவர்களிடம் அதிக லாபத்தை ஈட்ட பணத்தை அனுப்புமாறு கேட்டுள்ளனர். அதன்படி செய்து பலன் பெற்றதாக குழுவில் உள்ள மற்றவர்கள் எனது நண்பரையும் அவ்வாறு செய்யும்படி தூண்டினர்.
ஏற்கெனவே ரூ.30,000 சம்பாதித்திருந்ததால் அவருக்கு இதில் உள்ள ஆபத்து அதிகமாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் பேராசை தலைக்கு ஏறி மேலும் பணம் அனுப்பிவைக்கபட்டது. அதற்கு குழுவில் உள்ள மற்றவர்கள் பெரிய அளவில் பணம் சம்பாதித்ததாகக் கூறியது இதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது” என்று நிதின் காமத் தெரிவிக்கிறார்.
காமத்தின் நண்பர் ஒரு கட்டத்தில் இதிலிருந்து பின்வாங்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. பணத்தை எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தலைதூக்கியது. ஆனால், அதற்குள் ரூ. 5 லட்சம் வரை அவர் இழந்துவிட்டார் எனவும் காமத் கூறுகிறார். அதன்பிறகுதான் அந்த நண்பர் இதுபற்றி தன் மனைவிடம் தெரிவித்துள்ளார். அவர் இது ஒரு மோசடி என்பதை உடனடியாக உணர்ந்து காவல்துறையை அணுகினார்.
விழிப்புணர்வை பரப்புவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், காவல்துறை இதுபோன்ற பல வழக்குகள் பற்றி எச்சரிக்கை விடுத்தபோதும் நன்கு படித்தவர்கள்கூட பல லட்சம் கடன் வாங்கி, இதுபோன்ற மோசடிகளில் அதை இழக்கிறார்கள் என்று காமத் குறிப்பிட்டுள்ளார். “நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், விரைவாக நிறைய பணம் சம்பாதிக்க எளிதான வழி இல்லை” என நிதின் காமத் வலியுறுத்தியுள்ளார்.