“பிரதமர் ஸ்டாலின்?”.. வலையை வடக்கே வீசி “முதல் விதை”.. ஆதாயம் தருமா சமூக நீதி கூட்டமைப்பின் கூட்டம்?
"பிரதமர் ஸ்டாலின்?".. வலையை வடக்கே வீசி "முதல் விதை".. ஆதாயம் தருமா சமூக நீதி கூட்டமைப்பின் கூட்டம்?
சென்னை: டெல்லியில் திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.. இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. மேலும், பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை அமைப்பதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த சில வருடங்களாகவே, பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா பானர்ஜி களமிறங்கினார்.. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும் இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கியுள்ளனர்..
பாஜக எதிர்ப்பு
எனினும் இதில் இதுவரை பெரிய பலன் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.. ஆனால், இவர்கள் அனைவரையும்விட, “பாஜக எதிர்ப்பு” விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..