தீவிரமடையும் மோக்கா புயல் சின்னம்.! தமிழகத்தில் எந்த எந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.? வானிலை மையம் தகவல்
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெற்று வருகிற 12 ஆம் தேதி வங்கதேசம், மியான்மர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது.
வங்க கடலில் புயல் சின்னம்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக தாக்கும் என அச்சப்பட்ட மக்களுக்கு ஓரளவு நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த புயலின் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. நேற்று தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை “ஆழ்ந்த” காற்றழுத்த தாழ்வு நிலையாக தற்போது மாறியுள்ளது.
தீவிரம் அடையும் மோக்கா புயல்
இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நாளை மோக்கா புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு நிலை, தற்போது தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது புயலாக மாறிய பின், வரும் 12-ஆம் தேதி வங்கதேசம், மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைவு
இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதே நேரத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்ச்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க கூடும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.