திரிபுரா சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ ஜாதவ் லால் நாத்; வீடியோ வெளியாகி பரபரப்பு!
திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஜதாப் லால் நாத், கடந்த 2018-ம் வருடத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் சென்ற 2018 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பாக போட்டியிட்டார். அதோடு இவர் நடப்பு ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். இம்முறை திரிபுராவின் வடக்கு மாவட்டத்தின் பாக்பாசா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் திரிபுராவில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது பாக்பாசா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாசப் படம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜதாப் லால் நாத்துக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்ப ஆளும் பாஜக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று கர்நாடகாவில் கடந்த 2012 ஆம் வருடம் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆபாச படம் பார்த்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.