டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்!
துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வருடாந்திர தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.
வருடாந்திர தரவரிசை மதிப்பீட்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. ஆண்டு தர நிர்ணய மதிப்பீடுகளின்படி மே 2020 முதல் மே 2022 வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவிகித புள்ளிகளும், அதற்கு பிறகான போட்டிகளுக்கு 100 சதவிகித புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் 2019-2020ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 எனவும், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 எனவும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2021-2022ல் இங்கிலாந்துடன் வென்ற (4-0) தொடருக்கும் பாதி புள்ளிகளே கிடைத்தன. இதனால் ஆஸ்திரேலிய அணியின் புள்ளிகள் 121-ல் இருந்து 116 ஆக குறைந்துள்ளது.
அதேவேளையில் இந்தியா 2019-ல் நியூஸிலாந்து அணியிடம் 2-0 என தோல்வி அடைந்தது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் 2 புள்ளிகள் அதிகமாகி இந்திய அணி121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடர்கிறது. மற்ற அணிகளின் இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.