ஜி20 மாநாட்டில் தென்கொரிய தூதருடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராம்சரண் – வைரலாகும் வீடியோ
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் தென்கொரிய தூதர் ஜாங் ஜே போக் உடன் நடிகர் ராம்சரண் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.
இந்தியாவிற்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருதை எட்டிப்பிடிக்க வைத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். அப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்பாடலுக்கு இசையமைத்த மரகதமணி தான், இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்கிற பெருமையை பெற்றார்.
நாட்டு நாட்டு பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதற்கு அதன் நடனமும் ஒரு முக்கிய காரணம். அப்பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் போட்டி போட்டு ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக அதில் போடப்படும் ஹூக் ஸ்டெப் மிகவும் வைரல் ஆனதோடு, இன்ஸ்டாகிராமில் திரும்பிய பக்கமெல்லாம் இந்த பாடலுக்காக ரீல்ஸ்களும் அதிகளவில் பதிவிடப்பட்டு வந்தன.நாட்டு நாட்டு பாடலுக்கு தென் கொரியா நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் நாட்டு நாட்டு பாடலுக்கு ஒன்றாக நடனமாடி வீடியோ வெளியிட்டு அசத்தி இருந்தனர். அந்த வீடியோ பார்த்து மெர்சலான பிரதமர் மோடி, அவர்களை பாராட்டி பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட தென் கொரிய தூதர் ஜாங் ஜே போக், மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகன் ராம்சரண் உடன் நடனம் ஆடி உள்ளார். ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.